செய்திகள்

திருமாவளவனை இழிவுபடுத்தி பேசிய எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் - சீமான்

Published On 2018-12-12 05:13 GMT   |   Update On 2018-12-12 05:13 GMT
திருமாவளவன் குறித்துக் கூறிய கருத்தை எச்.ராஜா உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் அக்கருத்துக்குப் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் சீமான் கூறியுள்ளார். #Seeman #HRaja #Thirumavalavan
சென்னை:

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழகம் முழுவதும் மக்கள் செல்வாக்கினைப் பெற்றிருக்கிற ஒரு அரசியல் பேரியக்கம் விடுதலைச் சிறுத்தைகள். அது அடித்தட்டு விளிம்பு நிலை மக்களுக்காகவும், மண்ணின் உரிமை மீட்புக்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. அதனைக் குறை சொல்வதற்கோ, விமர்சிப்பதற்கோ பா.ஜ.க.விற்கு எவ்விதத் தகுதியும் இல்லை.

தமிழகத்தில் ஒரு கட்சி மக்களாலும், பிற கட்சிகளாலும் தீண்டத்தகாதக் கட்சியாக ஒதுக்கித்தள்ளப்பட்டுத் தமிழகத்தில் தனிமைப் படுத்தப்பட்டு இருக்கிற தென்றால் அது பாஜகதான். அக்கட்சியானது, தமிழகம் முழுவதும் கிளைப் பரப்பி மண்ணின் மக்களுக்கான அரசியலை செய்து வரும் விடுதலைச்சிறுத்தைகளைத் தீண்டத்தகாத கட்சியென்று கூறுவது நகைப்புக்குரியது.

ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகப் போராடிக் கொண்டிருக்கிற திருமாவளவனைப் பற்றிப் பேசுவதற்கு அணுவளவும் உரிமையோ, தகுதியோ அற்றவர் எச்.ராஜா. திருமாவின் அரசியல் நிலைப்பாடுகளில் எங்களுக்கு முரண்கள் இருக்கலாம்; கருத்தியலில் வேறுபடலாம். ஆனால், இவற்றையெல்லாம் கடந்து திருமாவளவன் எங்கள் மூத்தவர். அவர் மீதான இக்களங்கத்தையும், அருவெறுக்கத் தக்க விமர்சனத்தையும் ஒருநாளும் பொறுத்துக் கொள்ள முடியாது.



வடநாட்டில் இருந்து தமிழகத்திற்குப் பிழைக்க வந்து தமிழர்களின் தயவிலும், பெருந்தன்மையிலும் வாழ்ந்துகொண்டு மண்ணின் மக்களை இழித்துரைத்துப் பேசிவிட்டு எச்.ராஜா சர்மா போன்றோர் பாதுகாப்பாக வீடு திரும்ப முடிகிறதென்றால் தமிழர்கள் உயரியச் சனநாயகவாதிகள் என்பது மட்டும்தான் அதற்குக் காரணம். ஆகவே. எச்.ராஜா இதுபோன்ற பேச்சுக்களை இத்தோடு நிறுத்திக் கொள்வதுதான் அவருக்கும், அவரது கட்சிக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

திருமாவளவன் குறித்துக் கூறிய கருத்தை எச்.ராஜா உடனே திரும்பப் பெற வேண்டும். அக்கருத்துக்குப் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். அதனைச் செய்யத் தவறும் பட்சத்தில் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Seeman #HRaja #Thirumavalavan
Tags:    

Similar News