செய்திகள்

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு: புதுவை சபாநாயகரிடம் அதிமுக - திமுக கடிதம்

Published On 2018-12-11 06:57 GMT   |   Update On 2018-12-11 07:00 GMT
மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி அதிமுக மற்றும் திமுக சார்பில் சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. #MekedatuDam #DMK #ADMK

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் சிறப்பு கூட்டம் வருகிற 14-ந் தேதி கூடுகிறது.

அன்றைய தினம் சட்ட சபையில் காவிரி அணையின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தப்பட உள்ளது.

இதற்காக சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி அ.தி.மு.க.-தி.மு.க. சார்பில் சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன், சபாநாயகருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மேகதாதுவில் கர்நாடக அரசு தடுப்பணை கட்டு வதற்கான வரைவு அறிக்கைக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள அனுமதியை திரும்ப பெறவும். அனுமதி வழங்கிய மத்திய அரசின் தவறை கண்டித்தும் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றை மீறும் வகையில் காவிரி ஆற்றுப் படுகையில் கர்நாடக அரசு எவ்வித கட்டுமான பணியையும் செய்யக்கூடாது என கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியும் நடைபெற இருக்கும் சிறப்பு சட்ட மன்றத்தில் விவசாயிகள் நலனுக்காக சிறப்பு தீர்மானத்தை கொண்டு வர வேண்டும்.

தமிழக சட்டப் பேரவையில் இது சம்பந்தமாக கடந்த 6-ந் தேதி தமிழக தி.மு.க. அரசின் சார்பில் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து அதை ஏக மனதாக நிறைவேற்றி அத்தீர்மானத்தின் கடிதத்தை மத்திய அரசுக்கு வலியுறுத்தி அனுப்பியுள்ளார். காவிரி பிரச்சினையில் தமிழகத்தோடு இணைந்து செயல்பட வேண்டிய புதுவை அரசும் ஏகமனதாக இத்தீர்மானத்தை நிறைவேற்றி உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அன்பழகன் கடிதத்தில் கூறியுள்ளார்.

 


தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. சபாநாயகருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக மாநில அரசு மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அரசின் நீர்வளத்துறையும், சுற்றுச்சூழல் துறையும் அனுமதி வழங்கியுள்ளது.

மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகம், புதுவைக்கு வரும் காவிரி நீர் முற்றிலுமாக தடை செய்யப்படும். காவிரி நீரை நம்பி விவசாயம் செய்யும் தமிழகத்தின் டெல்டா மாவட்ட விவசாயிகளும், புதுவையின் காரைக்கால் கடைமடை பகுதி விவசாயிகளும் கடுமையான பாதிப்பிற்கு ஆளாக நேரிடும். விவசாய நிலங்கள் வறண்டு பாலைவனமாக மாறும். காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின்படி காவிரி நீரை உரிய பங்கீட்டின்படி வழங்குவதில்லை.

அப்படியே காவிரி நீரை வழங்கினாலும், தமிழக அரசு காரைக்கால் மாவட்டத்திற்கு உரிய பங்கீட்டை வழங்குவதில்லை. இதனால் காரைக்கால் மாவட்ட விவசாயிகள் பல ஆண்டாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தண்ணீர் இல்லாததால் ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் தரிசு நிலமாக மாறி வருகிறது.

இத்தகைய சூழலில் காவிரியின் குறுக்கே புதிதாக ஒரு அணை கட்ட நினைப்பது காரைக்கால் மாவட்டத்தை முற்றிலுமாக பாலைவனமாக மாற்றிவிடும். அணை கட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்கு முன்பாக மத்திய அரசு காவிரி நீரால் பயன் பெறும் மாநில அரசுகளின்கருத்துக்களை கேட்டிருக்க வேண்டும். எதேச் சதிகாரபோக்குடன் செயல் படக்கூடிய மத்திய பா.ஜனதா அரசு இவ்வி‌ஷயத்திலும் மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்கவில்லை. இது கடும் கண்டனத்திற்குரியது.

புதுவை மாநில மக்களின் ஜீவாதாரத்தை, விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாய சூழலில் நாம் தள்ளப்பட்டுள்ளோம். இதை உணர்ந்து தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார்.

இதேபோல புதுவை சட்டமன்றத்திலும் காவிரியின் குறுக்கே இனி எந்த அணையும் கட்ட அனுமதிக் கக்கூடாது என கர்நாடக அரசை வலியுறுத்தியும், ஏற்கனவே வழங்கிய அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்கின்ற என்னுடைய தீர்மானத்தை அரசின் தீர்மானமாக நிறை வேற்ற வேண்டும் என்று முன்மொழிகிறேன்.

இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. கடிதத்தில் கூறியுள்ளார். #MekedatuDam #DMK #ADMK

Tags:    

Similar News