செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் இன்று லோக் அதாலத்- ஒரே நாளில் 2½ லட்சம் வழக்குகள் விசாரணை

Published On 2018-12-08 11:22 GMT   |   Update On 2018-12-08 11:22 GMT
தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டன.
சென்னை:

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வர லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. இந்த லோக் அதாலத், தேசிய அளவில் ஆண்டுக்கு ஒரு முறையும், மாநில அளவில் 2 மாதங்களுக்கு ஒரு முறையும் நடத்தப்படுகின்றன.

லோக் அதாலத்தில், செக் மோசடி, வங்கிக்கடன், மோட்டார் வாகன விபத்து உள்பட 11 வகையான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, இருதரப்பினரின் சம்மதத்துடன் சுமூக முடிவு எடுக்கப்படும். இதற்காக ஒரு நீதிபதி மற்றும் 2 உறுப்பினர்கள் கொண்ட அமர்வை மாநில சட்டப்பணி ஆணைக்குழு உருவாக்கும்.

இதுபோன்ற மாபெரும் லோக் அதாலத் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. சென்னை ஐகோர்ட்டில், நீதிபதிகள் வைத்தியநாதன், கிருஷ்ணகுமார், கோவிந்தராஜ், பவானி சுப்பராயன், அப்துல் குத்தூஸ், தண்டபாணி, ராஜமாணிக்கம், சுப்பிர மணியம் பிரசாத், ஆனந்த் வெங்கடேஷ், சரவணன் ஆகியோர் தலைமையில் 10 அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஐகோர்ட்டு மதுரை கிளையில் 6 நீதிபதிகள் தலைமையில் 6 அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. இது போல மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் ஆகியோர் தலைமையிலும் அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தமிழகம் முழுவதும் 468 அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அமர்வுகள் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளது. இதில், எத்தனை வழக்குகள் சுமூக முடிவுக்கு வந்துள்ளது என்பது குறித்து மாலையில் தான் தெரிய வரும். #tamilnews
Tags:    

Similar News