செய்திகள்

திட்டமிட்டப்படி 4ந்தேதி வேலை நிறுத்தம் நடைபெறும்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

Published On 2018-12-01 08:33 GMT   |   Update On 2018-12-01 08:33 GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 4-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். #JactoGeo
சென்னை:

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்களின் ஒரு பிரிவான ஜாக்டோ-ஜியோ அமைப்பு புதிய ஓய்வு ஊதியம் முறையை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வுக்கு பிறகு வழங்கபடாமல் இருக்கும் 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும், ஊதிய முன்பாடுகளை களைய வேண்டும், அரசு பள்ளிகளை மூடக்கூடாது என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்.

இதை நிறைவேற்ற கோரி வருகிற 4-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருந்தனர்.

இது தொடர்பாக சென்னையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் போராட்ட விளக்கம் கூட்டம் நடத்தி அதில் நிர்வாகிகள் கோரிக்கை தொடர்பாக பேசினார்.


இந்த நிலையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளுடன் தமிழக அரசு நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் அரசு தரப்பில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து ஜாக்டோ-ஜியோவின் உயர் மட்டக்குழு கூட்டம் இன்று திருவல்லிக்கேணியில் நடந்தது. மாயவன், மீனாட்சி சுந்தரம், தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் கோரிக்கைகளை அரசு ஏற்காததால் ஏற்கெனவே அறிவித்தப்படி வருகிற 4-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. பிற்பகல் வரை கூட்டம் நடைபெற்றது.

பின்னர் ஜாக்டோ-ஜியோ அமைப்பு நிர்வாகி ஒருவர் கூறுகையில், எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்க முன்வராததால் நாங்கள் வருகிற 4-ந்தேதி முதல் திட்டமிட்டப்படி காலவரையற்ற போராட்டத்தை தொடங்குவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். #JactoGeo
Tags:    

Similar News