செய்திகள்

மேகதாது அணை பிரச்சினை- சுப்ரீம் கோர்ட்டில் வழக்குதொடர தமிழக அரசு முடிவு

Published On 2018-11-28 07:32 GMT   |   Update On 2018-11-28 07:32 GMT
மேகதாதுவில் கர்நாடகா அணைகட்ட எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. #MekedatuDam #KaveriWaterDispute #TNGovernment
சென்னை:

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் அணை கட்டுவதற்கான பணியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதற்கான ஆரம்பகட்ட ஆய்வு நடத்த கர்நாடகா அரசின் சார்பில் மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டு இருந்தது. அணைகட்ட தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போது ஆய்வுக்கு மட்டும்தான் அனுமதி அளிக்கிறோம். அணைக்கு அல்ல என்று மத்திய அரசு பதில் அளித்தது.

இந்த நிலையில் மேகதாது அணை தொடர்பாக செயல் திட்ட வரைவு அறிக்கையை மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்து இருந்தது.

அணை அமையும் இடம், அணைக்கான திட்ட மதிப்பீடு, அணையின் பலன்கள் உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கிய இந்த வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. குடிநீர்தேவை, மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே அணை கட்டுவதாக கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் பெற்றுவிட்டதால் இறுதி அறிக்கையை தயாரிக்கும் பணியில் கர்நாடக அரசு ஈடுபடும். அதற்கும் மத்திய அரசு ஒப்புதலை பெற்று விட்டால் மேகதாதுவில் அணை அமைவதை தடுக்க இயலாது.



மத்திய அரசின் இந்த ஒப்புதலுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்பு தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இந்தநிலையில் மேகதாதுவில் கர்நாடகா அணைகட்ட எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலை ரத்து செய்யவும் தமிழக அரசு கோர உள்ளது.

இந்தநிலையில் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணைகட்ட முடியாது என்று காவிரி மேலாண்மை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் கூறும்போது,

‘‘தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது பகுதியில் அணைகட்ட கர்நாடகத்துக்கு ஒப்புதல் தர வாய்ப்பு இல்லை. காவிரி அணையின் படுகை பகுதிக்குள் மேகதாது அணை வருவதால் ஆணையத்தின் ஒப்புதல் அவசியம்’’ என்றார். #MekedatuDam #KaveriWaterDispute #TNGovernment
Tags:    

Similar News