செய்திகள்
கொலை செய்யப்பட்ட ராமச்சந்திரன், வினோத்

ஏரல் அருகே இரட்டைக்கொலை- ரவுடி நண்பர் கொலையில் 2 வாலிபர்கள் கைது

Published On 2018-11-27 11:12 GMT   |   Update On 2018-11-27 11:12 GMT
ஏரல் அருகே இரட்டைக்கொலை தொடர்பாக 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
ஏரல்:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரம் வீரன் சுந்தரலிங்கம் நகர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் வினோத் (வயது 28). பிரபல ரவுடியான இவர் கடந்த 24-ந்தேதி இரவில் ஏரல் அருகே மேல மங்களகுறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரை சுடுகாட்டு பகுதியில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வினோத் தன்னுடைய நண்பரான ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் தெருவைச் சேர்ந்த தனுஷ் கோடியின் (30) மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதும், இதனை அறிந்த தனுஷ்கோடி தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து வினோத்தை கொலை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவான தனுஷ்கோடியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் வினோத் கொலை செய்யப்பட்ட அன்று அவரது நெருங்கிய நண்பரான குரும்பூரை அடுத்த கள்ளம் பாறை ராமச்சந்திரன்(22) என்பவரும் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் நேற்று வினோத் உடல் கிடந்த இடம் அருகே ஆற்றில் அமலைச்செடிகளுக்கு நடுவே மீட்கப்பட்டது.

இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இவரையும் தனுஷ் கோடி கும்பலே கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்த‌து. இதையடுத்து போலீசார் இரட்டை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வினோத், ராமச்சந்திரன் இரட்டை கொலை வழக்கில் கூலிப்படைக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். தனுஷ்கோடி தன்னுடைய நண்பர்களான வினோத், ராமச்சந்திரன் ஆகிய 2 பேரையும் வழக்கமாக மது அருந்தும் இடத்துக்கு வரவழைத்து, கூலிப்படையை ஏவி, அவர்களை தீர்த்து கட்டி இருக்கலாம். பின்னர் கூலிப்படையினர் அவர்களது உடல்களை தனித்தனியாக வீசிச் சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தனுஷ்கோடி, வினோத், ராமச்சந்திரன் ஆகியோர் மோட்டார் சைக்கிள்களில் இரவில் அடிக்கடி மணல் கடத்தியதாக கூறப்படுகிறது. எனவே, மணல் கடத்தலில் ஏற்பட்ட தகராறில் இரட்டைக் கொலை நடந்ததா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். தனுஷ்கோடியை கைது செய்த பின்னரே இந்த இரட்டை கொலை வழக்கில் மேலும் தகவல்கள் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகிறார்கள். இதற்கிடையே, இரட்டைக்கொலை தொடர்பாக மேலமங்களகுறிச்சியை சேர்ந்த துரைமுத்து(26), வெள்ளூரை சேர்ந்த முத்துமுருகன்(26) ஆகிய 2 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். இவர்கள் தனுஷ்கோடியின் நண்பர்கள் ஆவர். கைதான 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கு காரணம் என்ன? இரட்டைக் கொலையில் ஈடுபட்டவர்கள் யார்? யார்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #tamilnews
Tags:    

Similar News