செய்திகள்

கமுதியில் ஜவுளி வியாபாரி கொலை- மனைவியின் கள்ளக்காதலன் கைது

Published On 2018-11-26 10:31 GMT   |   Update On 2018-11-26 10:31 GMT
கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் வியாபாரியை தீர்த்துக் கட்டியதாக கைதான வாலிபர் தெரிவித்துள்ளார்.
கமுதி:

கமுதி அருகே உள்ள ராமசாமிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி ஜெயராமன் (வயது 37). இவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

வீட்டிற்குள் தூங்கிய அவரை யாரோ வெட்டிக் கொலை செய்து உடலை வாசலில் போட்டுச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கணவரின் உடலைப் பார்த்து கதறி அழுத ஜெயராமனின் மனைவி பொன்னாத்தாள் என்ற பொன்னுமணி (27) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

கொலை நடந்தபோது பொன்னுமணியும் அதே வீட்டில் தான் இருந்துள்ளார். எனவே அவருக்கு கொலையில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதினர்.

அவர்களது கிடுக்கிப்பிடி விசாரணையில், கள்ளக்காதலன் அசோக்குமாருடன் (27) சேர்ந்து கணவரை கொலை செய்ததை பொன்னுமணி ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அசோக்குமாரை தேடினர்.

இந்த நிலையில் அவர், மதுரை அண்ணாநகர் போலீசில் சரண் அடைந்தார். கமுதி போலீசார் அங்கு சென்று அசோக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசில் தெரிவித்த வாக்குமூலம் வருமாறு:-

எனது வீட்டுக்கு எதிரே தான் பொன்னுமணி வீடு இருந்தது. அவரது தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்ததால் தாய் விஜயாவோடு வசித்து வந்தார். இதனால் பொன்னுமணி படிக்கும் போதே எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

அவர்கள் புதிய வீடு கட்டும்போது நான் தான் தச்சு வேலை பார்த்தேன். மேலும் அனைத்து வேலைகளையும் முன்னெடுத்து செய்யும் போது பொன்னுமணியுடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தது. இது காதலாக மாறியது.

இந்த நிலையில் பொன்னுமணிக்கும், ஜெயராமனுக்கும் திருமணம் நடந்தது. அதன் பின்னர் தாய் வீட்டிலேயே அவர் வசித்ததால் எங்களது தொடர்பும் நீடித்தது.

நாளடைவில் இது ஜெயராமனுக்கு தெரிய வந்தது. அவர் எங்களை கண்டித்தார். மேலும் பொன்னுமணியை அழைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் நடத்தினார்.

காலையில் ஜவுளிக் கடைக்குச் செல்லும் ஜெயராமன் இரவு தான் திரும்புவார். இதனால் நான் மற்ற நேரங்களில் அங்கு சென்று பொன்னுமணியை சந்தித்து வந்தேன்.

எங்கள் கள்ளக்காதலுக்கு ஜெயராமன் இடையூறாக இருந்ததால், அவரை கொலை செய்ய திட்டமிட்டோம். இது பற்றி பொன்னுமணியுடன் ஆலோசித்தேன்.

இரவில் வீட்டின் கதவை பொன்னுமணி திறந்து வைத்தார். நான் வீட்டுக்குள் சென்று தூங்கிக் கொண்டிருந்த ஜெயராமனின் பிடரி, கழுத்து பகுதிகளில் அரிவாளால் வெட்டினேன்.

இதில் அவர் இறந்ததும், உடலை இழுத்து வாசலில் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டேன். மர்ம நபர்கள் யாரோ கொலை செய்து விட்டார்கள் என மற்றவர்கள் கருதும் வகையில், பொன்னுமணியை ஒரு அறையில் வைத்து பூட்டிச் சென்று விட்டேன். ஆனால் போலீசார் பொன்னுமணியை கைது செய்து விட்டனர். இதனால் சரண் அடைந்தேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News