செய்திகள்
வயலில் கறுப்பு கொடிகளை நட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி

விவசாய நிலங்களை அழித்து 4 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு- வயலில் கறுப்பு கொடிகளை நட்டு விவசாயிகள் போராட்டம்

Published On 2018-11-13 10:10 GMT   |   Update On 2018-11-13 10:10 GMT
வாசுதேவநல்லூர், சிவகிரி பகுதியில் விவசாய நிலங்களை அழித்து 4 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வயலில் கறுப்பு கொடிகளை நட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகிரி:

திருமங்கலம் முதல் செங்கோட்டை வரை 147 கிலோ மீட்டர் தொலைவுக்கு நான்குவழிச்சாலை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் 1,863 ஏக்கர் நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்த முடிவு செய்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் சிவகிரி, புளியங்குடி, வாசு தேவநல்லூர் பகுதியில் 69 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த சாலை அமைய உள்ளது. இதில் பெரும்பகுதி விவசாய நிலங்களாகும். தற்போதுள்ள திட்டப்படி 4 வழி சாலை அமைந்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஆயிரக்கணக்கான வாழை, தென்னை, மா, எலுமிச்சை மரங்கள் அழிக்கப்படும் நிலை உள்ளது.

இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்கின்றனர் விவசாயிகள். இதை தவிர்த்து அருள்புத்தூர் முதல் பாம்பு கோவில்சந்தை வழியாக சாலை அமைந்தால் அதில் பெரும்பகுதி தரிசு நிலமாக இருக்கிறது.

மேலும் இத்திட்டம் சில பெருநிறுவனங்கள், உயர்நிலை அரசியல் தலைவர்களின் லாபத்துக்காக கொண்டு வரப்படுகிறது. பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தாமல் நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை மேற்கொள்ளக்கூடாது என அப்பகுதி விவசாயிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று சிவகிரி பகுதி விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு வழிசாலைக்காக அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைதுறை கற்களை அகற்றிய விவசாயிகள் அங்கு கறுப்பு கொடிகளை நட்டு எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு வாசு தேவநல்லூர், சிவகிரி தாசில்தார்கள் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. #tamilnews
Tags:    

Similar News