செய்திகள்

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி கொட்டும் மழையில் 2-வது நாளாக போராட்டம் நடத்திய பொதுமக்கள்

Published On 2018-11-03 10:50 GMT   |   Update On 2018-11-03 10:50 GMT
இரணியல் அருகே டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கொட்டும் மழையில், 2-வது நாளாக பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரணியல்:

இரணியல் அருகே உள்ள காட்டுவிளை பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து உடனடியாக அந்த கடை அங்கிருந்து அகற்றப்பட்டது.

இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மீண்டும் அதே பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நேற்று கடையை திறக்க விடாமல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டனர்.

பொதுமக்களின் போராட்டத்துக்கு பிரின்ஸ் எம்.எல்.ஏ., பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், மூத்த நிர்வாகி எம்.ஆர்.காந்தி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர். போராட்டம் காரணமாக நேற்று அந்த டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை.

தகவல் அறிந்த கல்குளம் தாசில்தார் சஜித், இரணியல் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் பொதுமக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடுவோம் என உறதிப்பட எழுதி கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

தொடர்ந்து இரவு விடிய, விடிய அந்த பகுதி மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலையும் அவர்களது போராட்டம் தொடர்ந்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. #tamilnews
Tags:    

Similar News