செய்திகள்

பிளாஸ்டிக் தடை அறிவிப்பை அரசு தள்ளி வைக்க வேண்டும் - தமிழ்நாடு பிளாஸ்டிக் சங்கம் வலியுறுத்தல்

Published On 2018-10-26 11:18 GMT   |   Update On 2018-10-26 11:18 GMT
மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும்வரை பிளாஸ்டிக் தடை அறிவிப்பை அரசு தள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பிளாஸ்டிக் சங்கம் வலியுறுத்தியுள்ளது. #PlasticBan

சென்னை:

தமிழ்நாடு - பாண்டி பிளாஸ்டிக் சங்க தலைவர் சங்கரன், செயலாளர் வி.கே.பாலு ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்வர் சட்ட சபையில் 110 விதியின் கீழ் 1.1.2019 முதல், தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் ஒரு சில பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை, உபயோகம் முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது என்கின்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அது அல்லாமல் 25.06.2018 அன்று மேற்படி அறிவிப்பு சம்பந்தமான தமிழக அரசாணை எண். 84 மூலம் எந்தெந்த பிளாஸ் டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தமிழக அரசின் பிளாஸ்டிக் தடை அரசாணையை, நாம் முழுவதும் கவனமாக படித்தால், அதில் சில நுட்பமான வி‌ஷயங்கள் மறைந்திருப்பதை புரிந்து கொள்ளலாம்.

அதாவது கேரி பைகள் என்பதற்கான விளக்கம் மேற்படி அரசாணையின் படி, எந்த ஒரு பொருளாவது, கடையில் வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப எடை போட்டு, பேக்கிங் செய்யப்படும் பிளாஸ்டிக் பைகள் தான் கேரி பைகள் என்கின்றனர்.

அந்த கேரி பைகள் தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் பன்னாட்டு நிறுவனங்களால் ஏற்கனவே கடைகளில் பேக்கிங் செய்து விற்கப்படும் பொருட்களுக்கு, உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் பைகள், கேரி பைகள் இல்லை அவைகளுக்கு தடை இல்லை என்கின்றனர்.

லட்சக் கணக்கில் முதலீடு செய்து பிளாஸ்டிக் தொழிலை தமிழகத்தில் ஆரம்பித்துள்ள பல ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர்கள், தமிழக அரசின் பிளாஸ்டிக் தடையால், அனைத்து முதலீடுகளையும் இழந்து நடுத் தெருவுக்கு வந்து விடுவார்கள். இல்லை நாங்கள் பிளாஸ்டிக் தடையை அமுல்படுத்தியே தீருவோம் என்ற தமிழக அரசு கூறினால், உற்பத்தியாளர்களுக்கு குறைந்தது பத்து வருடங்களாவது கால அவகாசம் தேவை.

பிளாஸ்டிக் பொருட்கள் சம்பந்தமாக மத்திய அரசு எடுக்கப்போகும் இறுதி முடிவுவரைக்கும், பிளாஸ்டிக் தடை என்கின்ற அறிவிப்பை, தமிழக அரசு தள்ளி வைக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளனர். #PlasticBan

Tags:    

Similar News