செய்திகள்

டெல்லியில் தமிழ் கல்வி கழக புதிய கட்டிடம்- முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

Published On 2018-10-26 10:47 GMT   |   Update On 2018-10-26 10:47 GMT
டெல்லியில் உள்ள மயூர்விகார் பள்ளி வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பள்ளிக் கட்டட தொகுதிக்கு முதலமைச்சர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
சென்னை:

தலைநகர் டெல்லியில் கடந்த 90 ஆண்டுகளாக டெல்லி தமிழ் கல்விக் கழகத்தால் ஏழு இடங்களில் மொழி வாரி சிறுபான்மையின மேல்நிலைப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இங்கு, முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயப்பாடமாகவும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் விருப்பப்பாடமாகவும் பயிற்றுவிக்கப்படுகிறது.

இந்த பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்களில் 85 சதவிகிதம் தமிழர்கள் ஆவார்கள். இப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலம் தமிழ்ப் பாடப்புத்தகங்களை இலவசமாக வழங்கி வருகிறது.

டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 15 லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். பெருகி வரும் தமிழ் மக்களின் எண்ணிக்கையினை கருத்தில் கொண்டு, டெல்லி வளர்ச்சிக் குழுமத்தால், டெல்லித் தமிழ்க் கல்வி கழகத்திற்கு மயூர் விகாரில் பள்ளிக்கட்டடம் கட்டுவதற்கு 2½ ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மயூர் விகாரில் பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு நிதிஉதவி வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.

டெல்லித் தமிழ்கல்விக் கழகத்தின் சார்பில் டெல்லியில் உள்ள மயூர் விகார் பள்ளி வளாகத்தில் 13.79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக்கட்டப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டார்.

அதன்படி, டெல்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் சார்பில் டெல்லியில் உள்ள மயூர்விகார் பள்ளி வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புரட்சித் தலைவி அம்மா பள்ளிக் கட்டட தொகுதிக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

இந்த புதிய பள்ளிக்கட்டடம் 6515 சதுர மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் நான்கு தளங்களுடன் அமையவுள்ளது.

நிகழ்ச்சியில், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், அமைச்சர் பாண்டியராஜன், என்.தளவாய் சுந்தரம், பா.வளர்மதி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தலைமைச் செயலகத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் விவசாயிகளின் நலனுக்காக அடங்கல் பதிவேட்டினை மின்னணு பதிவேடாக மாற்றம் செய்யும் இ-அடங்கல் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், 1 கோடியே 7 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தாய்லாந்தில் உள்ள ஆசிய மண்டலத்தின் ஒருங்கிணைந்த பல்வகை பேரிடர் முன்னறிவிப்பு மையத்துடன் இணைந்து பல்வகை பேரிடர்களின் அதீத தாக்கத்தினை முன்னதாக அறிந்து அவசர முன்னெச்சரிக்கை மீட்பு நடவடிக்கைகளை முறைப்படுத்தும் இணையதள புவியியல் தகவல் முறை அமைப்பினையும் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News