செய்திகள்

கம்யூனிஸ்டு ஆசிரியரிடம் பாடம் படிப்பதால் கமல் அரசியலில் வெற்றி பெற முடியாது - பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2018-10-15 06:17 GMT   |   Update On 2018-10-15 06:17 GMT
கம்யூனிஸ்டு ஆசிரியரிடம் பாடம் படிப்பதால் கமல் அரசியலில் வெற்றி பெற முடியாது என்று பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #PonRadhakrishnan #KamalHaasan

நாகர்கோவில்:

தக்கலையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மீ டூ என்பது ஆதாரம் இல்லாமல் யார் மீதும் யார் வேண்டுமானாலும் புகார் கூறலாம் என்ற நிலை உள்ளது. இதன் மூலம் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு ஏற்படும் இழப்பை எளிதில் சரி செய்ய முடியாது. எனவே ஆதாரம் இல்லாமல் சகதியை அள்ளி வீசும் மீ டூ மூலமான புகார்களை ஏற்க முடியாது.

புதிய துறையான அரசியலுக்கு வந்துள்ள கமல் தனது அரசியல் பாடத்தை கேரளா, மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்டு ஆசிரியர்களிடம் படித்து வருகிறார். இதனால் கமல் அரசியலில் வெற்றி பெற முடியாது. தனது கட்சியில் நடிகர் விஜயை சேர்த்துக் கொள்வேன் என்று கமல் கூறியுள்ளார். இது புலிக்கு பயந்து என்மீது படுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவது போல உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தக்கலையில் நடந்த மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்தியில் மீண்டும் மோடியின் ஆட்சி அமையும். உலக நாடுகள் இந்தியாவின் வளர்ச்சியை தற்போது கவனித்து வருகிறது.


இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு ராஜபக்சே ஒரு கருவி தான். அப்போது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசும் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க.வும் தான் அந்த போரில் குற்றவாளிகள். இனி வரும் தேர்தலில் காங்கிரசுக்கு வாக்கு அளித்தால் அது இலங்கை தமிழர்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்.

சபரிமலை விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவையும் கேரள மாநில ஆட்சியாளர்களின் நடைமுறையையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குமரி மாவட்டத்தில் துறைமுகம் அமைக்க வேண்டும் என்பது தற்போது நமது மாவட்டத்தில் எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்கள் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாக தான் அமையும். இது 70 ஆண்டுகால கனவு திட்டம். ஆனால் அவர்களே இந்த திட்டத்தை நெல்லைக்கு மாற்ற கூறி வருகிறார்கள். பொய்யான தகவல்களை கொடுத்து மீனவர்களையும் ஏமாற்றி வருகிறார்கள்.

அதே போல குமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தையும் எதிர்க்கிறார்கள். 600 ஏக்கர் பரப்பளவில் குமரி, நெல்லை ஆகிய 2 மாவட்டத்துக்கு இடையே இந்த விமான நிலையம் அமைகிறது. மேலும் கன்னியாகுமரி- சென்னைக்கு கடல் வழியாக போக்குவரத்து நடை பெறுவதற்காக மத்திய சுற்றுலாத்துறை மந்திரியை சந்தித்து பேசியுள்ளேன். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan #KamalHaasan

Tags:    

Similar News