செய்திகள்

எச்.ராஜா மீது விரைவில் நடவடிக்கை- அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

Published On 2018-09-23 10:36 GMT   |   Update On 2018-09-23 10:36 GMT
முதல்-அமைச்சர் பாரபட்சம் காட்டமாட்டார், எச்.ராஜா மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #ministersellurraju #hraja

மதுரை:

மதுரையில் இன்று 2-வது கட்டமாக வாக்காளர் சேர்க்கை முகாம் நடந்து வருகிறது. அந்தந்த வாக்குச் சாவடிகளில் பொதுமக்களுக்கு உதவும் வகையில், அ.தி.மு.க. நிர்வாகிகள் வாக்குச் சாவடிகள் முன்பு அமர்ந்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து வருகிறார்கள்.

காளவாசல், சொக்கலிங்கநகர் வாக்குச் சாவடிகளில் அ.தி.மு.க. வினரின் வாக்காளர் சேர்ப்பு பணிகளை அமைச்சர் செல்லூர்ராஜூ பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற பாராளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் வாக்கு அளிக்க வசதியாக 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக தேர்தல் ஆணையம் 4 சிறப்பு முகாம்களை நடத்துகிறது.

இன்றைக்கு 2-வது கட்டமாக வாக்காளர் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இதில், இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வமாக வந்து விண்ணப்பித்து செல்கிறார்கள். இது அவர்கள் வாக்களிக்கும் ஆர்வத்தை காட்டுகிறது.

இன்று மனு கொடுத்த இளம்பெண் சுபாசினி, பலமுறை மனு கொடுத்தும் வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இடம் பெறவில்லை என்று தெரிவித்தார். இது போன்ற குறைகள் இனி வரும் காலங்களிலும் ஏற்படாத வகையில், தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு வாக்காளரின் வீட்டுக்குச்சென்று நேரடியாக ஆய்வு செய்து தகுதியான நபர்களை வாக்காளர் பட்டியலில் இடம்பெறச் செய்ய வேண்டும்.

தமிழக முதல்வர் மற்றும் காவல் துறையினரை விமர்சித்து பேசிய கருணாஸ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார். சட்டம் அனைவருக்கும் சமம். யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையை செய்யும். கருணாஸ் எம்.எல்.ஏ. விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்துள்ளது.


பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா விவகாரத்திலும் விரைவில் நடவடிக்கை இருக்கும். முதல்-அமைச்சரின் நடவடிக்கையில் பாரபட்சம் இருக்காது.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு அ.தி.மு.க. அரசு மதிப்பளிக்கும். ஸ்டெர்லைட் ஆலையை மூடும் கொள்கையில் இருந்து சிறிதளவும் பின் வாங்க மாட்டோம். அதில் உறுதியாக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநகர் மாவட்ட நிர்வாகிகள் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், சோலை ராஜா, பரவை ராஜா, கருப்பசாமி மற்றும் பலர் இருந்தனர். #ministersellurraju #hraja

Tags:    

Similar News