செய்திகள்

கொடைக்கானல் அருகே பழத்தோட்டங்களை நாசம் செய்த யானைகள்

Published On 2018-09-20 12:12 GMT   |   Update On 2018-09-20 12:12 GMT
கொடைக்கானல் அருகே வனப்பகுதியில் உணவு கிடைக்காததால் யானை கூட்டங்கள் ஊருக்குள் புகுந்து அறுவடைக்கு தயாராக உள்ள பழங்களை நாசம் செய்தது.
கொடைக்கானல்:

கொடைக்கானல் அருகே வடகவுஞ்சி பாண்டியன் நகர் பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைக்கூட்டங்கள், அந்த பகுதியில் உள்ள, பலா, பேரி, கொய்யா மற்றும் சீதாப்பழ மரங்கள் உள்ளிட்ட பல்வேறு மரங்களை ஒடித்தும், வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ள பழங்களை பறித்தும் என சேதம் விளைவித்து வருகிறது.

அஞ்சு வீடு, அஞ்சுரான் மந்தை பகுதிகளில் தொடர் முகாமிட்டு, யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளதால், அங்கிருந்து வெளியேறிய யானைகள், பாண்டியன் நகர் பகுதிகளுக்குள் தஞ்சம் அடைந்துள்ளது.

விரட்டப்படும் யானைகளுக்கு வனப்பகுதிகளுக்குள் முறையான உணவு இல்லாமல், மீண்டும் மீண்டும் பழத் தோட்டங்களுக்கு உணவுக்காக புகும் பரிதாப நிலை உள்ளது. முதல்கட்டமாக வனப்பகுதிகளுக்குள் யானைகளுக்கு உணவு ஏற்படுத்தி, வன எல்லைகளில் வேலிகள் அமைத்து, யானைகள் ஊருக்குள் வரவிடாமல் தடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

வனத்துறையினர் இதற்கு முழுமையான தீர்வு காணவும் தங்களது வாழ்வாதாரத்தை காக்கவும் கோரிக்கை வைப்பதோடு இப்பகுதியில் விவசாய எல்லைகளை வரையறை செய்து நீண்டதூரம் அகழிகள் அமைத்து யானைகள் இப்பகுதிக்கு வரும் வாய்ப்பை தடுக்கவும் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News