செய்திகள்

ஜிஎஸ்டிக்குள் வந்தால் பெட்ரோல் டீசல் விலையை இன்னும் உயர்த்துவார்கள்- தம்பிதுரை

Published On 2018-09-10 07:01 GMT   |   Update On 2018-09-10 07:01 GMT
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவந்தால், விலையை இன்னும் உயர்த்துவார்கள் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #PetrolDieselPrice #GST #ThambiDurai
சென்னை:

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்தால் விலை குறையும் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

பெட்ரோல் டீசல் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது. பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கும் விஷயத்தில் மத்திய அரசின்  செயல்பாட்டை நாங்கள் ஆதரிக்கவில்லை. அதிமுகவைப் பொருத்தவரை பெட்ரோல், டீசல் விலை குறையவேண்டும்.
தனியாருக்கு தந்த உரிமையை மீண்டும் அரசே ஏற்று விலையை நிர்ணயிக்கும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் கொள்கை.


பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு தான் குறைக்கவேண்டும். அதேசமயம் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்து விட்டு எல்லா உரிமையையும் மத்திய அரசு எடுத்துக்கொண்டால் விலையை இன்னும் உயர்த்தத்தான் செய்வார்கள். எனவே ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் டீசல் விலையை கொண்டு வருவதை ஏற்க முடியாது.

மாநில அரசுக்கு என சில உரிமைகள் இருக்கின்றன. மாநில அரசுகளுக்கு நிதி தேவைப்படுகிறது. ஆகவே, முழுவதையும் ஜிஎஸ்டியிடம் கொடுத்து விட்டால் நாங்கள் கையேந்தி நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

இவ்வாறு தம்பிதுரை கூறினார். #PetrolDieselPrice #GST #ThambiDurai
Tags:    

Similar News