செய்திகள்

அரசியல்வாதிகளின் ஊழல் குறித்து கேள்வி கேட்க வேண்டும் - போலீஸ் அதிகாரி ரூபா பேட்டி

Published On 2018-09-08 11:55 GMT   |   Update On 2018-09-08 11:55 GMT
அரசியல்வாதிகளிடம் ஊழல் குறித்து பொதுமக்கள் கேள்வி கேட்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரி ரூபா பேட்டியில் கூறியுள்ளளார். #PoliceOfficerRoopa #Sasikala

வடவள்ளி:

அரசுப் பணியில் நேர்மையாக பணிபுரியும் அரசு ஊழியர்களை ஆண்டு தோறும் தேர்வு செய்து கோவை மாவட்ட ஊழல் எதிர்ப்பு இயக்கம் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுத்துறைகளில் நேர்மையாக லஞ்சம் பெறாமல் பணிபுரிந்து வரும் ஆண் மற்றும் பெண் அதிகாரிகள் 18 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு விருது வழங்கும் விழா கோவை வேளாண்மை பல்கலைகழக பட்டமளிப்பு விழா அரங்கில் இன்று நடந்தது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் பணி புரிந்து, பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டு வந்த ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா, தேர்வு செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

மேலும், ஊழல் அதிகாரிகளை எதிர்த்து தைரியமாக புகார் கொடுத்த, அவர்களை பிடிப்பதற்கு உறுதுணையாக இருந்த 10 பேர் கவுரவிக்கப் பட்டனர். இதையொட்டி ‘நாட்டை நாசமாக்கிக் கொண்டிருக்கும் ஊழல் வளரப் பெரிதும் காரணம் அரசியல்வாதிகளே! அரசு அலுவலர்களே! பொது மக்களே!’ என்ற தலைப்பில் கவிஞர் கவிதாசன் நடத்திய பட்டிமன்றம் நடந்தது.


விழாவில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரி ரூபா நிருபர்களிடம் கூறியதாவது:-

ஊழல் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஊழல் தொடர்பாக அரசியல்வாதிகளிடம் மக்கள் கேள்விகளை எழுப்ப வேண்டும். சமூக மாற்றத்திற்கு நேர்மையான அதிகாரிகளின் பங்கு நிச்சயம் இருக்கும்.

சிறையில் சசிகலா தொடர்பான வி‌ஷயங்களில் எனது பணியை மட்டும் தான் செய்தேன். மன்னார்குடி மாபியா உங்களை சும்மா விடாது என்று கூட பலர் என்னிடம் கூறினார்கள். அது பற்றி நான் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. பரப்பன அஹ்ரஹார சிறையில் தற்போது என்ன நிலைமை இருக்கின்றது என்பது குறித்து எனக்கு தெரியாது.

எனது பணியிடமாற்றத்திற்கு பிறகு புதிதாக வந்த சிறை அதிகாரி, சிறையில் சசிகலா விதிமீறல் செய்தது தொடர்பான அறிக்கையை மேல் அதிகாரிகளிடம் சம்ர்பித்ததாக கூறப்பட்டது. அந்த அறிக்கையை நானே ஆர்.டி.ஐ மூலம் தகவல் பெற முயற்சித்தும் என்னால் பெற முடியவில்லை.

சிறையில் எனது நடவடிக்கை தொடர்பாக என்னை பணியிடமாற்றம் செய்தது குறித்து நான் எந்த கேள்வியையும் யாரிடமும் எழுப்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். #PoliceOfficerRoopa #Sasikala

Tags:    

Similar News