செய்திகள்

நிலக்கோட்டை தாலுகாவில் 1500 ரேசன் கார்டுகள் ரத்து? - குடும்பத்தினர் கலக்கம்

Published On 2018-09-08 11:05 GMT   |   Update On 2018-09-08 11:05 GMT
நிலக்கோட்டை தாலுகாவில் 1500 ரேசன் கார்டுகள் ரத்தாகி விட்டதோ என குடும்பத்தினர் கலக்கமடைந்துள்ளனர்.

நிலக்கோட்டை:

தமிழகம் முழுவதும் ரேசன் அட்டை தாரர்களுக்கு ஸ்மார்ட் ரேசன் கார்டு வினியோகம் செய்யும் பணி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 14 லட்சம் கார்டுகள் வினியோகம் செய்யப்பட்டது. இதில் 10-ல் இருந்து 15 ஆயிரம் வரை ரேசன் கார்டுகளில் பிழை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஒரு சில இடங்களில் குடும்ப தலைவர் படத்திற்கு பதிலாக சாமி படங்கள், நடிகர்-நடிகைகள் படம் இடம் பெற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கணினி பிழை ஏற்பட்ட ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை நிலக்கோட்டை உள்பட மாவட்டத்தில் உள்ள 7 தாலுகாவிலும் வினியோகம் செய்யவில்லை.

இதனால் பொதுமக்கள் ரேசன் பொருட்கள் வாங்க முடியாமல் அவதியடைந்து வந்தனர். இது குறித்து அவர்கள் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பிழை இருந்தாலும் ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை பொது மக்களுக்கு வினியோகம் செய்ய அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டது. ஆனால் அதற்கான பணிகளை அதிகாரிகள் மேற் கொள்ளாமல் அலட்சியமாகவே உள்ளனர்.

கடந்த 1 வருடமாகவே நிலக்கோட்டை தாலுகாவில் சுமார் 1500 ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை பெற முடியாமல் பொதுமக்கள் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து பல்வேறு புகார் மனுக்கள் கொடுக்கப்பட்ட போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இ-சேவை மையங்களிலும் ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் பிழை திருத்தும் பணி நடைபெறவில்லை. எனவே இந்த கார்டுதாரர்கள் ஒரு வருடத்துக்கும் மேலாக ரேசன் பொருட்கள் வாங்க வில்லை. இதன் காரணமாக தங்கள் ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் ரத்தாகி விடுமோ? என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை உடனே பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய உத்தரவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News