செய்திகள்
வட்டமணியகாரன்பட்டியில் மழை வேண்டி கிராமத்தினர் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த காட்சி

திண்டுக்கல் அருகே வினோதம்- மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்த கிராமத்தினர்

Published On 2018-09-08 05:14 GMT   |   Update On 2018-09-08 05:14 GMT
திண்டுக்கல் அருகே மழை வேண்டி கழுதைகளுக்கு கிராம மக்கள் திருமணம் செய்து வழிபட்டனர். அதன்பின் அருகில் உள்ள கிராமங்களுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டன.
வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள வட்டமணியக் காரன்பட்டியில் சுமார் ஆயிரம்பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் கடந்த 2 வருடங்களாக கடும் வறட்சியில் உள்ளது.

இதனை சுற்றியுள்ள பல கிராமங்களிலும் மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீருக்கும், விவசாயத்திற்கும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

எனவே கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஊர் மக்கள் சார்பில் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு செல்வ விநாயகர் கோவிலில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

நேற்று மாலை பெண் கழுதை இருந்த ஊருக்கு ஒரு தரப்பினர் சென்று அதனை மேளதாளங்கள் முழங்க அழைத்து வந்து அறையில் தங்க வைத்தனர். பின்னர் இன்று காலை மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது.

அதன்பிறகு 2 கழுதைகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு மாலை சூட்டப்பட்டது.

தொடர்ந்து கோவிலை வலம் வந்து மாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின் வட்டமணியக்காரன்பட்டி உள்பட அருகில் உள்ள கிராமங்களுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டன.

திருமணத்திற்கு வந்தவர்களுக்காக 7 மூடைகள் மற்றும் காய்கறிகள் கொண்டு உணவு தயாரிக்கப்பட்டது. திருமண சடங்குகள் முடிந்தபிறகு அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இது குறித்து அந்த கிராமத்தின் பெரியவர்கள் தெரிவிக்கையில், கடந்த 3 வருடத்திற்கு முன்பு இப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவியது. அப்போது எங்கள் முன்னோர்கள் சொல்லிக்கொடுத்ததுபோல பஞ்சகல்யாணி (கழுதை)களுக்கு திருமணம் செய்து வைத்தோம். அதன்பிறகு நல்ல மழை பெய்து ஊர் செழிப்படைந்தது.

தற்போது அதே வறட்சியான நிலை நிலவி வருவதால் மீண்டும் அதுபோல கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தோம். திருமணம் முடிந்தபின் ஊர் மக்கள் சார்பில் விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்தப்படும். மாலையில் சீர்வரிசை கொடுத்து மணமக்களை ஊருக்கு அனுப்பி வைப்போம் என்று தெரிவித்தனர். #tamilnews
Tags:    

Similar News