செய்திகள்

திருமுல்லைவாயல் அருகே போலி ஆவணம் தயாரித்து கோவில் நிலம் விற்பனை - 3 பேர் கைது

Published On 2018-09-08 03:03 GMT   |   Update On 2018-09-08 03:03 GMT
திருமுல்லைவாயல் அருகே போலி ஆவணம் தயாரித்து கோவில் நிலத்தை விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆவடி:

பெரம்பூர் மேலப்பட்டி பொன்னப்பன் தெருவை சேர்ந்தவர் மகேந்திரா (வயது 23). இவருடைய அண்ணன் ஜெவர்சந்த் (28). இருவரும் மின்சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர். இவர்கள் புதிதாக இடம் வாங்கி வீடு கட்ட தீர்மானித்தனர். இதையடுத்து இடம் பார்க்க திருமுல்லைவாயல் பகுதிக்கு சென்றனர்.

அப்போது காஞ்சீபுரம், சண்முகா நகரை சேர்ந்த ஜாகீர் உசைன் (54), திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு நவசக்திநகரை சேர்ந்த கவுதம்பிரபு (30), அவருடைய மனைவி ஸ்டெல்லாமேரி (28) ஆகியோர் தங்களுக்கு சொந்தமான நிலம் என்று கூறி திருமுல்லைவாயல் அருகே உள்ள ஒரு இடத்தை 28 லட்சம் ரூபாய்க்கு மகேந்திராவுக்கும், அவரது அண்ணன் ஜெவர்சந்த்துக்கும் விற்பனை செய்தனர்.

இதனையடுத்து அந்த இடத்தில் வீடு கட்டும் பணியை இருவரும் தொடங்கினர். உடனே அப்பகுதி மக்கள் அங்கு வந்து இது எட்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம், நீங்கள் எப்படி இங்கு வீடு கட்ட முடியும்? என்று கூறி வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து மகேந்திரா ஆவடி தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று சர்வே எண்ணை ஆய்வு செய்ததில் இவர்கள் வாங்கிய இடம் எட்டியம்மன் கோவிலுக்கு சொந்தமானது என்பதும், போலி ஆவணம் தயாரித்து கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஜாகீர் உசைன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து விற்றதும் தெரிந்தது.

இதுகுறித்து மகேந்திரா திருமுல்லைவாயல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாகீர் உசைன், கவுதம்பிரபு மற்றும் ஸ்டெல்லாமேரி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
Tags:    

Similar News