search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி ஆவணம்"

    • புஷ்பராணி அந்த எட்டே கால் சென்ட்க்கு உரிய தொகையை திரும்பக் கேட்டார்.
    • புஷ்பராணி சமயபுரம் போலீசில் புகார் செய்தார்.

    திருச்சி:

    திருச்சி மணச்சநல்லூர் மேட்டு இருங்களூர் யாகூப் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி புஷ்பராணி (வயது 48).

    பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மனைவி சந்திரா. இவர்கள் 2 பேரும் உறவினர்கள்.

    இந்த நிலையில் சந்திரா இருங்கலூரில் தனக்கு சொந்தமாக இருக்கும் 21 சென்ட்நிலத்தை விற்பதாக அவரிடம் கூறியுள்ளார்.

    அதைத் தொடர்ந்து புஷ்பராணி அந்த நிலத்தை வாங்க முடிவு செய்து ரூ. 18 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை கொடுத்தார்.

    பின்னர் புஷ்பராணி அந்த நிலத்துக்குரிய வில்லங்க சான்றை பார்த்தபோது 21 சென்ட் நிலத்தில் எட்டே கால் சென்ற நிலம் ஸ்ரீதேவி மங்கலம் பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவரது பெயரில் இருப்பது தெரியவந்தது. ஆனால் போலி ஆவணங்கள் தயாரித்து சந்திரா அவரை ஏமாற்றியது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து புஷ்பராணி அந்த எட்டே கால் சென்ட்க்கு உரிய தொகையை திரும்பக் கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து புஷ்பராணி சமயபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சந்திரா மற்றும் அவரது உறவினர்கள் தர்மராஜ், மகன் பிரபாகர் மரியராஜ், மனைவி மார்க்சி மற்றும் மார்க்கெட் புஷ்பலதா, டெய்சி ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • ஆரோக்கியநாதன் போலி ஆவணம் மூலம் பிரெஞ்சு குடியுரிமை பெற முயற்சித்தது தெரிய வந்தது.
    • நீதிபதி மோகன் குற்றம் சாட்டப்பட்ட 2 பேருக்கு தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தைச் சேர்ந்தவர் மதிவாணன். இவர் கடந்த 9.01.2014-ல் புதுச்சேரி பிரெஞ்சு தூதரகத்தில் தனது போலியான வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை கொடுத்து பிரெஞ்சு குடியுரிமை பெற சிலர் முயற்சிப்பதாக புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

    விசாரணையில் புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்த ஆரோக்கியநாதன் போலி ஆவணம் மூலம் பிரெஞ்சு குடியுரிமை பெற முயற்சித்தது தெரிய வந்தது. மேலும் சோலைநகரை சேர்ந்த சாரங்கபாணி ஆவணங்கள் தயாரிக்க உடந்தையாக இருந்ததும் தெரிந்தது.

    இதையடுத்து 2 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து புதுச்சேரி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மோகன் குற்றம் சாட்டப்பட்ட ஆரோக்கிய நாதன், சாரங்கபாணி ஆகியோருக்கு தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    புதுச்சேரியில் போலியான ஆவணங்கள் மூலம் பிரெஞ்சு குடியுரிமை பெற முயற்சித்தவர்களுக்கு முதல்முறையாக நீதிமன்றத்தின் மூலம் தண்டனை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • போலி ஆவணம் தயா ரித்து, தொடர்ந்து ஆக்கிர மித்து வருவதாக கூறப்படு கிறது.
    • நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் கீழ காசாக் குடி பகுதியில், புதுச்சேரி அரசு இந்து சமய அற நிலையத் துறைக்குட்பட்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஆதிபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவி லுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பல்வேறு தரப்பி னர் போலி ஆவணம் தயா ரித்து, தொடர்ந்து ஆக்கிர மித்து வருவதாக கூறப்படு கிறது.

    கோவிலுக்கு சொந்த மான நிலத்தை மீட்க பல்வேறு தரப்பினர் முயற்சித்து வந்தாலும், புதுச்சேரி அரசு இந்து அறநிலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இதனை கண்டு கொள்ளாமல் இருப்பதாக கூறப்படுகிறது. புதுச்சேரி அரசின் இந்து அறநிலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி யினர் மற்றும் ஆதிபுரீஸ்வரர் தேவஸ்தான சொத்து மீட்புக் குழு, காரைக்கால் பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். மாவட்ட இந்து முன்னணி தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார். நகர தலைவர் இன்ஜினியர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.

    • சொத்துக்களை அபகரிக்க முயன்ற சாந்தி, சந்திரசேகர் உள்பட 11 பேரை போலீசார் தேடி வந்தனர்.
    • முதல் குற்றவாளியான சாந்தியை போலீசார் கைது செய்ய மற்ற 10 பேர்களை தேடி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் கான்வென்ட் ரோடு பகுதியில் உள்ள நிலத்தை நாகர்கோவிலைச் சேர்ந்த லெட்சுமணன் என்பவரிடம் இருந்து கடந்த 1968-ம் ஆண்டில் விருதுநகரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரும் இணைந்து வாங்கினர்.

    இதில் தனது பகுதியான 97 செண்ட் நிலத்தை கொடைக்கானலைச் சேர்ந்த விஸ்வா உருமின் என்பவருக்கு சங்கர் விற்பனை செய்துள்ளார். இந்த விற்பனை தொடர்பாக பத்திரம் பதிந்து தருவதில் விஸ்வா உருமின், சங்கர் மற்றும் சந்திரசேகர் ஆகியோருக்கு இடையே கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது.

    இதனிடையே கடந்த 2012-ம் ஆண்டு சங்கர் இறந்து விட்டார். கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சாந்தி. இவரது கணவர் பெயர் சந்திரசேகர். இந்த பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி போலியான ஆவணம் தயார் செய்த சாந்தி இந்த சொத்துக்களை அபகரிக்க முயன்றார்.

    இதற்காக போலியான ஆவணத்தை தயார் செய்து சங்கர் தனது மகள் சாந்தி, மருமகன் சந்திரசேகர் உள்ளிட்டவர்களுக்கு தானஷெட்டில்மென்ட் எழுதி கொடுத்தார். இந்த போலி ஆவணம் தயார் செய்து ரூ.பல கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிக்க உடந்தையாக இருந்த சாந்தியின் கணவர் சந்திரசேகர், இவர்களின் மகன் சித்தார்த், கிருஷ்ணசாமி, கொடைக்கானலைச் சேர்ந்த கணேசன், போலி ஆவணம் தயாரிக்க உதவிய ஆவண எழுத்தர்கள் மருதுபாண்டி, கில்பர்ட், பத்திரபதிவு செய்த முன்னாள் சார் பதிவாளர் முருகேசன், இந்த ஆவணத்தை தயாரிக்க உதவிய வக்கீல்கள் சுதாகர், முகமது மைதீன், ராகவேந்திரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கரின் மனைவி ஜெயந்தியின் பவர் ஏஜெண்டான கோபி கொடைக்கானல் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில் போலி ஆவணம் தயாரித்து பல கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிக்க முயன்ற சாந்தி, சந்திரசேகர் உள்பட 11 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் முதல் குற்றவாளியான சாந்தியை போலீசார் கைது செய்ய மற்ற 10 பேர்களை தேடி வருகின்றனர்.

    • பணத்தை திருப்பி தராமல் பல மாதங்களாக ஏமாற்றி வந்துள்ளனர்.
    • போலி ஆவணத்தை காட்டி பணத்தை பறித்த திருமணி, ஸ்ரீதேவி ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கூடுவாஞ்சேரி:

    செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே உள்ள பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 40). இவரிடம் தாம்பரம் கடப்பேரி பகுதியை சேர்ந்த திருமணி, பீர்க்கன்காரணை பகுதியை சேர்ந்த ஸ்ரீதேவி ஆகிய இருவரும் சேர்ந்து ஊரப்பாக்கம் அருகே காரணைப்புதுச்சேரி மயிலியம்மன் நகர் பகுதியில் உள்ள ஒரு மனையின் போலி ஆவணத்தை காட்டி, இந்த மனையை உங்களுக்கு வாங்கி தருகிறோம் என்று கூறி ரூ.30 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை ஆன்லைன் மூலமாக பெற்றுக்கொண்டனர்.

    பின்னர் பணத்தை திருப்பி தராமல் பல மாதங்களாக ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து தினேஷ் குமார் கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார். குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து போலி ஆவணத்தை காட்டி பணத்தை பறித்த திருமணி, ஸ்ரீதேவி ஆகிய இருவரையும் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    • சிந்தாதிரிப்பேட்டை காக்ஸ் தெருவில் தலா 1083 சதுர அடி கொண்ட 2 வீடுகள் உள்ளன.
    • கைது செய்யப்பட்டவர்களை மத்திய குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

    சென்னை:

    காஞ்சிபுரம் பி.எஸ்.கே. தெருவை சேர்ந்தவர்கள் லட்சுமி பாய், பத்மா பாய். இவர்களுக்கு சென்னை, சிந்தாதிரிப்பேட்டை காக்ஸ் தெருவில் தலா 1083 சதுர அடி கொண்ட 2 வீடுகள் உள்ளன.

    இவற்றை போலி ஆவணங்கள் மூலமாக கலைச்செல்வி, அன்பு, சுசீலா ஆகியோர் அபகரிப்பு செய்துள்ளதாக தெரிகிறது. இதன் மதிப்பு ரூ.3 கோடி ஆகும். இதுபற்றி லட்சுமி பாய், பத்மா பாய் ஆகியோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், கலைச்செல்வி, அன்பு ஆகியோரை கைது செய்தனர்.

    இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களை மத்திய குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

    • போலி ஆவணம் தயாரித்து நில மோசடி செய்துள்ளனர்.
    • ரமேஷ், தினேஷ் லிங்கம் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எங்களுக்கு தெலுங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டத்தில் 7 ஏக்கர் 9 செண்ட் நிலம் சொந்தமாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் எங்களது நிலத்தை கிரையம் செய்து கொடுக்குமாறு கேட்டார். அதற்கு மறுத்து விட்டோம்.

    இந்த நிலையில் தெலுங்கானா அரசு பதிவுத்துறையில் இருந்து எங்களது நில கிரையம் தொடர்பாக குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நான் தெலுங்கானா சென்று கிரைய ஒப்பந்தத்தை ரத்து செய்தேன்.

    இந்த நிலையில் மீண்டும் எனது சகோதரர் பெயரில் போலி பத்திரம் தயாரித்து தெலுங்கானாவில் உள்ள நிலத்தை அபகரிக்க முயற்சி செய்தனர். இது தொடர்பாக சிவகாசியை சேர்ந்த தினேஷ்லிங்கத்திடம் கேட்ட போது, நிலத்தை கிரையம் செய்து தருமாறும், இல்லாவிடில் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார். இதற்கு ரமேஷ் உள்பட 4 பேர் உடந்தையாக உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த புகாரின் அடிப்படையில் சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி ரமேஷ், தினேஷ் லிங்கம் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • போலி ஆவணங்களை கொடுத்து 1.16 கோடி வீட்டு கடனை வங்கி ஒன்றில் வாங்கியது தெரிய வந்தது.
    • 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    சென்னை நங்கநல்லூரை சேர்ந்த ராஜேஸ்வரி, மேட வாக்கத்தை சேர்ந்த ஜெகநாதன் அவரது மனைவி முத்துலட்சுமி ஆகியோர் போலி ஆவணங்களை கொடுத்து 1.16 கோடி வீட்டு கடனை வங்கி ஒன்றில் வாங்கியது தெரிய வந்தது. 3 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    • வார்டு உறுப்பினர் கோவிந்தன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • வழக்கில் சம்பந்தப்பட்ட சாந்தி கடந்த 2017-ம் ஆண்டு இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சக்திவேல் (வயது25). இவர் கடந்த 2016-ம் ஆண்டு அப்பகுதியில் துப்புரவு பணியாளராக வேலைக்கு சேர்ந்தார்.

    இந்த நிலையில் 1998-ம் ஆண்டு பிறந்த சக்திவேல், 1997-ம் ஆண்டு பிறந்ததாக போலி ஆவணம் கொடுத்து துப்புரவு பணியாளர் வேலைக்கு சேர்ந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து எழுந்த புகார் காரணமாக அவர் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் சஸ்பெண்டு செய்யப்பட்ட நிலையில் டிசம்பர் மாதத்தில் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

    இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் சக்திவேலை பணியில் சேர்த்தது தொடர்பாக அப்போது பதவியில் இருந்த முன்னாள் பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தி, முன்னாள் பேரூராட்சி தலைவர் கலைவாணி (65), முன்னாள் 3-வது வார்டு உறுப்பினர் கோவிந்தன் (52) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

    இதுதொடர்பாக மாரண்டஅள்ளி போலீசார் சக்திவேல், முன்னாள் பேரூராட்சி தலைவர் கலைவாணி, வார்டு உறுப்பினர் கோவிந்தன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் செயல் அலுவலர் சாந்தி கடந்த 2017-ம் ஆண்டு இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முகமது இப்ராகிம் இறந்த சில நாட்களில் அவரே தனக்கு சொத்துக்களை உயில் எழுதி வைத்ததாக அப்துல் ஹக் போலி ஆவணம் தயாரித்துள்ளார்.
    • முகமது இப்ராகிமின் மனைவி ரஹிமா பீவி மோசடி குறித்து வீரசோழன் போலீசில் புகார் செய்தார்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை அடுத்துள்ள வீரசோழன் மேலவண்டல் தெருவை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் அப்துல் ஹக் போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்ததாக தெரிகிறது.

    முகமது இப்ராகிம் இறந்த சில நாட்களில் அவரே தனக்கு சொத்துக்களை உயில் எழுதி வைத்ததாக அப்துல் ஹக் போலி ஆவணம் தயாரித்துள்ளார். இதனை தனது பெயருக்கு மாற்ற பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையறிந்த முகமது இப்ராகிமின் மனைவி ரஹிமா பீவி மோசடி குறித்து வீரசோழன் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதையடுத்து ரஹிமா பீவி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த கோர்ட்டு சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு வீரசோழன் போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இறந்தவர் தனக்கு உயில் எழுதி வைத்தது போல் போலி ஆவணம் தயாரித்து பல கோடி மதிப்புள்ள நிலத்தை அப்துல் ஹக் அபகரிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    • இந்த கோவில் செயல் அலுவலராக மஞ்சு உள்ளார்.
    • போலி ஆவணம் தயாரித்து வருவாய்துறைக்கு தடையில்லா சான்று கொடுத்து மின் இணைப்பு ஆணை பெற்றுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் பகுதியில் குட்டியாண்டவர்கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமயஅறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில் செயல் அலுவலராக மஞ்சு உள்ளார்.இவர் அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-தெற்கு பிச்சாவரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். விவசாயி. இவர் கடந்த 30-ந் தேதி கோவிலில் பயன்படுத்தப்படும் துறை ரீதியான முத்திரையை பயன்படுத்தி போலி ஆவணம் தயாரித்து வருவாய்துறைக்கு தடையில்லா சான்று கொடுத்து மின் இணைப்பு ஆணை பெற்றுள்ளார். எனவே இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    அதன்பேரில் போலீசார் ஜெயராமன் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்யப்பட்டுள்ளது.
    • நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை எஸ்.எஸ். காலனி, நேரு தெருவை சேர்ந்தவர் சிவராஜன் (49). இவர் மதுரை மாநகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்து உள்ளார்.

    அந்த மனுவில், மதுரை ஒத்தக்கடை, அரசரடியை சேர்ந்த ஜெயச்சந்திரன், பைபாஸ் ரோடு அந்தோணிராஜ், அரசரடி ரஞ்சித்குமார் ஆகிய 3 பேரும் எனக்கு சொந்தமான இடத்துக்கு போலி ஆவணம் தயார் செய்து அபகரிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

    எனவே போலீசார் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×