செய்திகள்

ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டிடம் - வீட்டை இடிக்க முயன்றதால் தொழிலாளி தற்கொலை

Published On 2018-09-05 07:05 GMT   |   Update On 2018-09-05 07:05 GMT
ஊத்துக்கோட்டை அருகே ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டி இருந்த வீட்டை அதிகாரிகள் இடித்துவிடுவார்கள் என்ற பயத்தில் தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ளது பால்ரெட்டி கண்டிகை. இப்பகுதியில் ஊத்துக்கோட்டை ஏரியில் இருந்து பேரண்டூர் ஏரிக்கு செல்லும் பாசன கால்வாய் இடத்தை 40-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளனர். இங்கு வசித்து வந்தவர் சுப்பிரமணி (வயது 70), தொழிலாளி.

இந்த நிலையில் நீர்நிலை பகுதிகள் ஆக்கிரமிப்பால் ஏரிக்கு தண்ணீர் செல்வது பாதிக்கும் நிலை ஏற்பட்டு இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து கடந்த வாரம் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற சென்றனர். அப்போது ஆக்கிரமிப்பாளர் வீடுகளை காலி செய்ய ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்று தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் வீடுகளை அகற்றாமல் சென்றனர்.

அதிகாரிகள் நடவடிக்கையால் பயந்து இருந்த தொழிலாளி சுப்பிரமணி இதுபற்றி உறவினர்களிடம் கூறி வருத்தம் அடைந்தார். வீடு இடிக்கப்பட உள்ளதை நினைத்து புலம்பி வந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

இதற்கிடையே இன்று காலை மீண்டும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வருவதாக அப்பகுதியில் தகவல் பரவியது.

இதனால் மனவேதனையில் இருந்த சுப்பிரமணி திடீரென வி‌ஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார். அவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

இதற்கிடையே சுப்பிரமணி தற்கொலை செய்து இருப்பதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த விவசாயி தரணி என்பவர் மயங்கி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வீடு இடிக்கப்படுவதற்கு பயந்து தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து பதட்டமான நிலை நீடிப்பதால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொழிலாளி தற்கொலையை அடுத்து ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியை அதிகாரிகள் இன்று தொடங்கவில்லை.
Tags:    

Similar News