செய்திகள்
வைகை ஆற்றை அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார்.

வைகை ஆற்றை பொக்கி‌ஷமாக பாதுகாக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

Published On 2018-09-02 11:45 GMT   |   Update On 2018-09-02 11:45 GMT
கழிவு நீர் கலப்பதை தடுத்து வைகை ஆற்றை பொக்கி‌ஷம் போல் பாதுகாக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். #AnbumaniRamadoss #VaigaiRiver

மதுரை:

வைகை ஆற்றை பாதுகாப்போம் என்ற தலைப்பில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மதுரையில் விழிப்புணர்வு பேரணி-பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது தெரிவித்ததாவது:-

தமிழகத்தின் 4-வது மிகப்பெரிய நதி வைகை. ஆனால் இதனை தற்போது மதுரையின் கூவம் என்று சொல்கிறார்கள். இது மிகவும் வேதனையாக இருக்கிறது. சென்னையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கூவம் நதியில் குளித்தார்கள். குடிக்க நீர் எடுத்தார்கள். கோவிலில் அபிஷேகம் செய்தார்கள்.

அதேபோல் வைகை ஆறும் புனிதமாகத்தான் இருந்தது. வைகை அணை நீர் சோழவந்தான் வரை நன்றாகவே வருகிறது. மதுரை மாநகராட்சிக்குள் வந்த பிறகுதான் கழிவு நீர் கலக்கிறது. அரசு ஆஸ்பதிரியில் இருந்து 5 லட்சம் லிட்டர் சுத்திரிகரிக்கப்படாத கழிவு நீர் வைகையில் கலக்கிறது.


மதுரையில் 58 இடங்களில் 98 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் வைகை ஆற்றில் கலக்கிறது. இது தவிர 200 தனியார் தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவு நீரும் கலக்கிறது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார் என கூறுகிறார்கள். ஆனால் அவர் சாக்கடையில் இறங்குகிறார் என்பது கசப்பான உண்மை. வரலாற்று சிறப்பு வாய்ந்த வைகை ஆற்றை சாக்கடையாக மாற்றி விட்டார்கள்.

தமிழகத்தின் 4-வது மிகப்பெரிய நதி, 12 கிளைகள் ஒருங்கிணைந்த ஆறு, 6 அணைகளில் இருந்து வரும் நீர் 5 மாவட்டங்கள் வழியாக பாய்ந்து 4.17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதனை அரசாங்கம் பொக்கி‌ஷம்போல் பாதுகாக்க வேண்டும்.

வைகையில் மணல் கொள்ளை நடக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு பாலத்திற்கு சமமாக மணல் இருந்ததாக வரலாறு கூறுகிறது.

இந்தியாவில் பருவநிலை மாற்றம் காரணமாக வரலாறு காணாத வெள்ளம், அடுத்த 3 ஆண்டுகளில் கடும் வறட்சி என கால நிலை மாறப்போகிறது. அதற்கு தகுந்தாற்போல் நாம் தயாராக வேண்டும். வெள்ளம் காரணமாக வரும் தண்ணீரை வீணாக்க கூடாது. உபரிநீரை தேக்கி வைத்து பயன்படுத்த வேண்டும். கண்மாய் ஒரு தடவை நிரம்பினால் 3 ஆண்டுகளுக்கு அதை பயன்படுத்த முடியும். காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

தமிழக அரசியல் சுத்தமாக இல்லை. அதனை சீர்திருத்த வேண்டியது எங்களின் கடமை என்று கருதுகிறோம். தமிழக அரசியலை பொறுத்தவரை நடிகர்கள் மட்டுமின்றி விளையாட்டு வீரர்கள் உள்பட யார் வேண்டுமானாலும் வரலாம். தி.மு.க.வில் நடப்பது உள்கட்சி பிரச்சினை. குடும்ப விவகாரம் அது பற்றி கருத்து கூறுவது நல்லதல்ல. தமிழகத்தில் இன்று நிர்வாகம் என்றால் கொள்ளை என்று அர்த்தம். தமிழகத்தில் வளர்ச்சிப் பணிகள் அறவே இல்லை.

மத்திய அரசில் ஒரே நாடு, ஒரே தேர்தல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இது தேவையற்றது. பாராளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும் என நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News