செய்திகள்

ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - பட்டதாரி பெண் பலி

Published On 2018-08-28 17:57 GMT   |   Update On 2018-08-28 17:57 GMT
நாகர்கோவிலில், ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட பொருட்கள் வாங்கச்சென்ற பட்டதாரி பெண் பரிதாபமாக இறந்தார்.
நாகர்கோவில்:

நாகர்கோவிலில், ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட பொருட்கள் வாங்கச்சென்ற பட்டதாரி பெண் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் தெற்கு நெசவாளர் காலனியை சேர்ந்தவர் ஜஸ்டஸ்சேகர். இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் லிசா (வயது 23). பி.காம். பட்டதாரியான இவர், நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களாக பணிபுரிந்து வந்தார். வேலைக்கு செல்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் புதிதாக ஒரு ஸ்கூட்டர் வாங்கியிருந்தார்.

இந்தநிலையில் ஓணம் பண்டிகையையொட்டி கோலமிடுவதற்காக கோலப்பொடி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக லிசாவும், அவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்த தோழி ரோசி ஜெனட் (22) என்பவரும் ஸ்கூட்டரில் சென்றனர்.

அவர்கள் பொருட்கள் வாங்கிவிட்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். பால்பண்ணை சந்திப்பு அருகே சென்றதும் பால் பாக்கெட் வாங்குவதற்காக ஸ்கூட்டருடன், சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் லிசா படுகாயம் அடைந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த சிறுவனும் பலத்த காயம் அடைந்தான். உடனே அங்கு நின்றவர்கள், லிசாவை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி லிசா பரிதாபமாக இறந்தார்.

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிறுவன் மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

இதுகுறித்து ரோசி ஜெனட் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் லிசா மீது மோதிய சிறுவன் பிளஸ்-1 மாணவன் என்பதும், அந்த மாணவன் தனது நண்பனின் தந்தைக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றபோது இந்த விபத்து நடந்ததும், மாணவனுக்கு பின்னால் அமர்ந்து சென்ற அவனுடைய நண்பனும் லேசான காயம் அடைந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அந்த மாணவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News