செய்திகள்

நாகர்கோவிலில் வீட்டில் இருந்த செல்போன்- ரூ.10 ஆயிரம் திருட்டு- மர்மநபர்கள் தப்பி ஓட்டம்

Published On 2018-08-26 14:19 GMT   |   Update On 2018-08-26 14:19 GMT
நாகர்கோவிலில் நேற்றிரவு வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த செல்போன் மற்றும் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் வட்டக்கரையைச் சேர்ந்தவர் அலோசியஸ் பானு, (வயது 54), இவர் கேட்டரிங் வேலை செய்து வருகிறார். இவரது மகள் ரேசல் (24). இவர்கள் இருவரும் நேற்றிரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 2 மணியளவில் மர்மநபர் ஒருவர் ரேசல் கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றார். திடுக்கிட்டு எழுந்த ரேசல் திருடன்... திருடன்... என கூச்சலிட்டார்.

இதையடுத்து அலோசியஸ் பானு கண் விழித்தார். அவர், திருடனை பிடிக்க முயன்றார். அதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். ஆனால் வீட்டின் மேஜையில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஒன்றையும் மர்மநபர் திருடிச்சென்றிருந்தார்.

வீட்டின் ஜன்னல் வழியாக கையை நுழைத்து கதவை திறந்து கொள்ளையன் வீட்டிற்குள் புகுந்தது தெரியவந்தது. இது குறித்து நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

கொள்ளையன் குறித்து ரேசலிடம் போலீசார் அடையாளங்களை கேட்டறிந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால் கொள்ளையர்கள் யாரும் சிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் கதவில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராவின் காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News