செய்திகள்

தஞ்சை அருகே விவசாய சங்க நிர்வாகியை தாக்கி 7 பவுன் சங்கிலி பறிப்பு

Published On 2018-08-16 17:38 GMT   |   Update On 2018-08-16 17:38 GMT
தஞ்சை அருகே விவசாய சங்க நிர்வாகியை தாக்கி 7 பவுன் சங்கிலியை பறித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா கக்கரை கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார். தமிழக விவசாயிகள் சங்க கூட்டு இயக்க மாநில துணை தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் நேற்று கக்கரையில் இருந்து வண்ணிப்பட்டு கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது கார் மற்றும் 4 மோட்டார் சைக்கிளில் வந்த சிலர், திடீரென சுகுமார் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி, அவரை கீழே தள்ளினர்.

பின்னர் கார், மோட்டார் சைக்கிள்களில் இருந்து இறங்கி வந்தவர்கள் கம்பி, கம்புகளால் சுகுமாரை தாக்கியதுடன் அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலி, அவரிடம் இருந்த செல்போன், ரூ.82 ஆயிரத்தை பறித்து கொண்டு சென்றுவிட்டனர். இதில் காயம் அடைந்த அவர் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், கடந்த 12-ந் தேதி கக்கரையில் உள்ள வில்லம்மாள் கோவில் திருவிழாவில் கிடா வெட்டி அன்னதானம் நடைபெற்றது. இதில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர். இது சிலருக்கு பிடிக்காததால் சுகுமாரை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து விவசாய சங்க நிர்வாகியை தாக்கியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News