செய்திகள்

திருமங்கலம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் மீது தாக்குதல் - 3 பேர் கைது

Published On 2018-08-09 05:30 GMT   |   Update On 2018-08-09 05:30 GMT
திருமங்கலம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரரை தாக்கிய ரெயில்வே ஊழியர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம்:

திருமங்கலம் அருகேயுள்ள வில்லூரைச் சேர்ந்தவர் கார்த்திக் செல்வம் (வயது 30). இவர் கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணமடைந்ததையொட்டி சிவரக்கோட்டை பகுதியில் கார்த்திக் செல்வம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த நாகேஸ்வரன் (34), அவரது மைத்துனர் மச்சவேல் (45) மற்றும் முத்துவேல் (45) ஆகியோர் அங்கு வந்தனர்.

போதையில் இருந்த அவர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் கார்த்திக் செல்வத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திடீரென்று அவர்கள் 3 பேரும் சேர்ந்து போலீஸ்காரரின் சீருடையை கிழித்ததோடு சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரது இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

3 பேரும் சேர்ந்து தாக்கியதில் போலீஸ்காரர் கார்த்திக் செல்வம் படுகாயமடைந்தார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

போலீஸ்காரர் தாக்கப்பட்டது குறித்து கிராம நிர்வாக அதிகாரி முருகாண்டி கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகேஸ்வரன், மச்சவேல், முத்துவேல் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

கைதான நாகேஸ்வரன் மத்திய ரிசர்வ் போலீசில் போலீஸ்காரராகவும் முத்துவேல் ரெயில்வேயில் கேட் கீப்பராகவும் பணியாற்றி வருவது தெரிய வந்துள்ளது.
Tags:    

Similar News