செய்திகள்

ஓசூர் அருகே வனப்பகுதியில் 2 காட்டு யானைகள் தஞ்சம் - பொதுமக்களுக்கு வனத்துறை அறிவுரை

Published On 2018-07-25 06:05 GMT   |   Update On 2018-07-25 06:05 GMT
ஓசூர் அருகே உள்ள வனப்பகுதியில் 2 காட்டு யானைகள் அடைந்திருப்பதால் ஆடு, மாடு மேய்க்க யாரும் வனப்பகுதிக்குள் செல்லவேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
ஓசூர்:

கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த ஏராளமான காட்டு யானைகள் ஓசூர் அருகே வனப்பகுதிகளில் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் கிராமத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. விவசாயிகளை காலால் மிதித்து கொன்று வருகிறது. கடந்த வாரம் சின்ன மல்லப்பா என்ற விவசாயியை யானை மிதித்து கொன்றது.

இந்த நிலையில் ஓசூரை அடுத்த பேரிகை வனப்பகுதியில் எ.செட்டிப்பள்ளியில் 2 யானைகள் தஞ்சம் அடைந்துள்ளன. இந்த யானைகளால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், வனப்பகுதிக்குள் ஆடு, மாடு, மேய்க்க செல்லவேண்டாம் என்றும் வனப்பகுதிக்குள் நடமாட வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் வனப்பகுதி வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கவனமாக செல்ல வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.
Tags:    

Similar News