செய்திகள்

பெண் தொழிலாளி மாயம்: மில் பஸ்சை சிறை பிடித்து உறவினர்கள் போராட்டம்

Published On 2018-07-22 12:43 GMT   |   Update On 2018-07-22 12:43 GMT
திண்டுக்கல் அருகே பெண் தொழிலாளி மாயமானதை தொடர்ந்து மில் பஸ்சை சிறை பிடித்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

வடமதுரை

திண்டுக்கல் அருகே வடமதுரையில் பண்ணாரி மில் இயங்கி வருகிறது. இந்த மில்லுக்கு வடமதுரை, அய்யலூர், மணப்பாறை, வையம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் சென்று வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்களை அழைத்து வருவதற்காக மில் நிர்வாகம் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகிறது. வையம்பட்டி போத்தனூரை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மில் நிர்வாகத்திடம் இது குறித்து கேட்டனர். ஆனால் அவர்கள் அலட்சியமாக பதில் கூறி உள்ளனர். இதனால் விஜயலட்சுமியின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

இன்று காலை வையம்பட்டி பகுதிக்கு சென்று 3 மில் பஸ்களை பொன்னம்பலபட்டி சுங்கச்சாவடி அருகே விஜயலட்சுமியின் உறவினர்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி வடமதுரை போலீசில் புகார் அளிக்க அறிவுறுத்தினர். அதன்பின் பஸ்கள் விடுவிக்கப்பட்டது. இதனால் காலை நேரத்தில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், மில்வேலைக்கு நிர்வாகத்தின் வாகனத்தில் தான் தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். ஆனால் தங்களுக்கு சம்மந்தம் இல்லாதது போல் மில் நிர்வாகத்தினர் நடந்து கொள்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமாநில தொழிலாளர்கள் மர்மமான முறையில் இறந்தனர். தொடர்ந்து இதுபோன்ற பிரச்சினைகள் மில்லில் நடைபெற்று வருகிறது. எனவே போலீசார் இங்கு அதிரடி சோதனை நடத்தி உண்மையை வெளிகொண்டு வர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News