search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறவினர்கள் போராட்டம்"

    • கடந்த 14-ந்தேதி தோட்டத்திற்கு பூப்பறிக்க சென்ற அனிதா, அங்குள்ள பள்ளமடை குளத்தின் மறுகால் தண்ணீர் செல்லும் ஊருணியில் பிணமாக மிதந்தார்.
    • சிறுமி அனிதா வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு ஊருணியில் மூழ்கி இறந்ததாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள பள்ளமடை கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 41).

    இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் திருவாளி முத்து(14) என்ற மகனும், அனிதா(13) என்ற மகளும் உள்ளனர். அனிதா அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 14-ந்தேதி தோட்டத்திற்கு பூப்பறிக்க சென்ற அனிதா, அங்குள்ள பள்ளமடை குளத்தின் மறுகால் தண்ணீர் செல்லும் ஊருணியில் பிணமாக மிதந்தார். இதையடுத்து மானூர் போலீசார் அவரது உடலை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் குளத்தில் அதிக தண்ணீர் தேக்கி வைப்பதற்காக, அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் தண்ணீர் அதிக அளவு வெளியேறி சிறுமி அனிதா வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு ஊருணியில் மூழ்கி இறந்ததாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மணல் மூட்டைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமியின் குடும்பத்திற்கு வெள்ள நிவாரண தொகை வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 4-வது நாளாக அனிதாவின் உறவினர்கள் பள்ளமடை கிராமத்தில் உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் மானூர் தாசில்தார் முருகன், இன்ஸ்பெக்டர் சபாபதி ஆகியோர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • மாலையில் நாகராஜன், தனது 2-வது மகனை பள்ளிக்கு சென்று அழைத்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.
    • நரேன் கடந்த 2 ஆண்டுகளாக சரியாக படிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    நெல்லை:

    பாளையங்கோட்டை சாந்தி நகர் போலீஸ் காலனியை சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு மனைவி மற்றும் நரேன் (வயது 14), சுஜித்(11) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    நாகராஜன் தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாளையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நரேன் பாளை-திருச்செந்தூர் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பும், சுஜித் அதே பள்ளியில் 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று நரேன் பள்ளிக்கு செல்லவில்லை. அவரது தம்பி சுஜித் மட்டும் பள்ளிக்கு சென்றுள்ளார். அவரது பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். இதனால் நரேன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

    இந்நிலையில் மாலையில் நாகராஜன், தனது 2-வது மகனை பள்ளிக்கு சென்று அழைத்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு பூட்டிக்கிடந்துள்ளது. உடனே நாகராஜன் கதவை தட்டியுள்ளார். ஆனால் உள்ளே இருந்த நரேன் கதவை திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

    அப்போது நரேன் வேஷ்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    அவரது உடலை பார்த்து நாகராஜன் அலறி துடித்தார். தகவல் அறிந்து வந்த அவரது மனைவியும் மகனின் உடலை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து பாளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நரேன் கடந்த 2 ஆண்டுகளாக சரியாக படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த தேர்வு ஒன்றில் மிகக்குறைவான மதிப்பெண் எடுத்ததாகவும், இதனால் அவனது பெற்றோரை பள்ளிக்கு அழைத்த நிர்வாகம், நரேனின் படிப்பு குறித்து கூறி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

    இதன் காரணமாக நரேன் மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே மாணவன் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகத்தின் நெருக்கடியே காரணம் என குற்றம்சாட்டி மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று பள்ளியின் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களுடன் உதவி போலீஸ் கமிஷனர் ஆவுடையப்பன், இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது ஆர்.டி.ஓ. அயூப்கான், மாவட்ட கல்வி அலுவலர் ராஜா ஆகியோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் கொடுக்கும் அறிக்கையின்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். எனினும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். திடீரென அவர்கள் சாலை மறியலுக்கு முயன்றனர். அவர்களுக்கு ஆதரவாக சில அமைப்பினர்களும் திரண்டனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • சத்யாவிற்கு ரத்தப்போக்கு அதிகரித்து உள்ளதால் உடனடியாக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. ஜூலியட் சீசர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு வந்தனர்.

    காஞ்சிபுரம்:

    உத்திரமேரூர் அடுத்த பெருநகர் பழைய காலனியை சேர்ந்தவர் ரகோத்தமன். விவசாயி. இவரது மனைவி சத்யா (வயது30). இவர் செய்யூர் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் சத்யா கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சத்யாவுக்கு நேற்று மாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக மானாமதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.

    அவருக்கு டாக்டர் லத்திகா மற்றும் நர்சுகள் பிரசவம் பார்த்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே நேற்று இரவு 11:30 மணியளவில் சத்யாவுக்கு பிறந்த ஆண் குழந்தை இறந்து விட்டதாக சத்யாவின் உறவினர்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் சத்யாவிற்கு ரத்தப்போக்கு அதிகரித்து உள்ளதால் உடனடியாக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சத்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் மானாமதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சத்யாவின் உறவினர்கள் ஏராளமானோர் இன்று காலை திரண்டனர். அவர்கள் சத்யாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தாயும் குழந்தையும் இறந்துவிட்டதாக குற்றம்சாட்டினர். ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர்கள் மற்றும் நர்சுகளிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். மேலும் திடீரென ஆஸ்பத்திரி அருகே மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. ஜூலியட் சீசர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சத்யா மற்றும் அவரது குழந்தையின் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து பெருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் பேச்சுவார்த்தை
    • உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த ஏடிஎஸ் காலனியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் 40 வருடமாக சுடுகாடு இல்லாததால் இந்த பகுதியை சேர்ந்த யாரேனும் இறந்தால் அவர்களை புதைப்பதற்காக புதூர் பகுதியில் உள்ள மயானத்திற்கு எடுத்து சென்று அடக்கம் செய்வது வந்தனர்.

    இந்த நிலையில் ஏடிஎஸ் காலனியை சேர்ந்த முருகன் (வயது 62). தொழிலாளி என்பவர் உடல்நல குறைவால் இறந்து விட்டார்.

    அவரை புதைப்பதற்காக புதூரில் உள்ள மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் இங்கு புதைக்க கூடாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த ஏடிஎஸ் காலனியை சேர்ந்த பகுதி மக்கள் மற்றும் இறந்தவரின் உறவினர்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த் துறையினர் மற்றும் வாணியம்பாடி தாலுகா போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • மீண்டும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்திய போது சந்தியா மறுத்ததால் வாலிபர் அவரை கொலை செய்தது தெரியவந்தது.
    • தொடர்ந்து தாசில்தார் தலைமையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள திருப்பணி கரிசல்குளம் மணிமேடை தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகள் சந்தியா(வயது 18). இவர் நெல்லை டவுன் ரதவீதியில் நெல்லையப்பர் கோவில் அருகே உள்ள ஒரு பேன்சி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் சந்தியா வேலைக்கு சென்றபோது அந்த கடையின் அருகே உள்ள கடையில் வேலை பார்த்த மூலக்கரைப்பட்டி அருகே உள்ள தோப்பூரை சேர்ந்த 17 வயது வாலிபர் அவரை கத்தியால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றார்.

    இதுதொடர்பாக டவுன் போலீசார் அந்த வாலிபரை கைது செய்து நடத்திய விசாரணையில், அந்த வாலிபரும், சந்தியாவும் காதலித்து வந்ததும், 2 மாதங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டதும் தெரியவந்தது. தற்போது மீண்டும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்திய போது சந்தியா மறுத்ததால் அந்த வாலிபர் அவரை கொலை செய்தது தெரியவந்தது.

    இதற்கிடையே சந்தியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ரூ.1 கோடி இழப்பீடு, இடம் உள்ளிட்டவை கேட்டு அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் நேற்று 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஊர்வலமாக சென்று பேட்டை ரெயில்வே தண்டவாளம் அருகே மெயின்ரோட்டில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் செய்தனர். இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பப்பட்டன.

    தொடர்ந்து தாசில்தார் தலைமையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிலும் உடன்பாடு எட்டப்படாத நிலையில் ஆதி திராவிட நலத்துறை துணை கலெக்டர் பெனட் ஆசீர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அரசு வேலை வழங்குவதற்கு அரசிற்கு பரிந்துரை செய்யப்படும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதற்கட்ட நிதியை உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இதையடுத்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனாலும் இன்று 3-வது நாளாக திருப்பணி கரிசல்குளம் கிராமத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த சந்தியாவின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும், வாலிபர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறி அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    • வளர்ச்சி குறைவாக உள்ள குழந்தையை கருக்கலைப்பு செய்ய சம்மதம் தெரிவித்தனர்.
    • டாக்டர் குழுவினர் இளம்பெண்ணுக்கு வளர்ச்சி குறைவான குழந்தையை கருக்கலைப்பு மூலமாக அகற்றினர்.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து அவரை பரிசோதனைக்காக குடும்பத்தினர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை ஸ்கேன் சென்டர் ஒன்றில் பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு இரட்டை குழந்தை கருவில் இருப்பது தெரியவந்தது.

    தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஒரு குழந்தை வளர்ச்சி குறைவாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள் இளம்பெண்ணின் உறவினர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் வளர்ச்சி குறைவாக உள்ள குழந்தையை கருக்கலைப்பு செய்ய சம்மதம் தெரிவித்தனர். டாக்டர் குழுவினர் இளம்பெண்ணுக்கு வளர்ச்சி குறைவான குழந்தையை கருக்கலைப்பு மூலமாக அகற்றினர். பின்னர் பரிசோதனை செய்து பார்த்தபோது மற்ற குழந்தை நலமாக இருப்பதாக கூறினார்கள்.

    இதையடுத்து அந்த இளம்பெண் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற அந்த பெண் கழிவறைக்கு சென்றபோது மற்றொரு குழந்தையும் இறந்து வெளியே வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த இளம்பெண்ணை உடனடியாக மீண்டும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது உறவினர்கள் டாக்டரின் கவனக்குறைவால் குழந்தை இறந்து விட்டதாகவும், சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது பற்றி கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரில் சம்பந்தப்பட்ட டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இதேபோல் டாக்டர் தரப்பினரும் புகார் கூறியிருந்தனர். இருதரப்பு புகார் மீதும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • பிரியங்கா வீட்டில் உடலில் காயங்க ளுடன் பிணமாக கிடந்தார்.
    • மருத்துவமனை வளாகத்தில் காவல் துறையினரை முற்றுகையிட்டு உறவினர்கள் நேற்று மாலை வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம், மெணசி அடுத்த மருக்காலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். கூலி தொழிலாளி.இவருக்கு ராஜாத்தி என்ற மனைவியும் பிரியங்கா என்ற மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் பிரியங்காவிற்கும் தருமபுரி அடுத்த ஜருகு ஏரிக்கரை பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இவர்கள் இருவருக்கும் 2-வது திருமணம் என்பதால் இருவருக்கும் வரதட்சணை சம்மந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் இவர்களுக்கு 4 வயது மற்றும் 2 வயதில் இரண்டு ஆண்கள் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் பிரியங்காவின் கணவன் சுந்தரமூர்த்தி பிரியங்காவின் பெற்றோர்களுக்கு அடிக்கடி போன் செய்து பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

    இதனால் பிரியங்காவின் பெற்றோர்கள் சுமார் 15 லட்சம் வரை கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    அதே போல் மீண்டும் தொடர்ந்து பிரியங்காவிடம் உன்னுடைய பெற்றோரிடம் பணம் வாங்கி வா என அடித்து துன்புறுத்தி உள்ளார்.

    இந்நிலையில் பிரியங்கா வீட்டில் உடலில் காயங்க ளுடன் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து தொப்பூர் காவல் துறையினர் பிரேதத்தை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் தனது மகளை சுந்தரமூர்த்தி அடித்து கொலை செய்து விட்டதாகவும், அவரது இறப்பிற்கு காரணமான சுந்தரமூர்த்தியை கைது செய்ய வேண்டும் என மருத்துவமனை வளாகத்தில் காவல் துறையினரை முற்றுகையிட்டு உறவினர்கள் நேற்று மாலை வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் சமரசபேச்சு வார்த்தையில் ஈடுபட்டு விரைவில் சுந்தரமூர்த்தியை கைது செய்து வருவாய் கோட்டா ட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.

    • சத்யாவிற்கு சத்து ஊசியும், வலது கையில் நரம்பு ஊசியும் செலுத்தப்பட்டது.
    • தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம் சின்னனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி சத்யா (வயது 29). பட்டதாரியான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது கடந்த அக்டோபர் மாதம் 31-ந் தேதி, சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    கடந்த நவம்பர் மாதம் 4-ந் தேதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் சத்யாவிற்கு சத்து ஊசியும், வலது கையில் நரம்பு ஊசியும் செலுத்தப்பட்டது. அதன் பிறகு சத்யாவின் வலது கண்ணில் வீக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் 12-ந் தேதி சத்யாவின் தந்தை உள்பட சிலர், அரசு மருத்துவமனை டாக்டரை சந்தித்து, முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனவும், அதனால் கண்ணில் வீக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் புகார் கூறினார். மேலும் டிஸ்சார்ஜ் செய்யுங்கள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.

    ஆனால் அவர்களை டாக்டர்கள் டிஸ்சார்ஜ் செய்யாமல் அங்கேயே வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் 12-ந் தேதி சத்யா கண் பார்வை இழந்து விட்டதாக டாக்டர்களே உறவினர்களிடம் கூறியுள்ளனர். தொடர்ந்து 22-ந் தேதி தனியார் மருத்துவமனையில் சத்யா சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து சத்யாவின் கண்ணை அகற்றியும் விட்டனர்.

    இதனால் ஆவேசமடைந்த சத்யாவின் உறவினர்கள், தவறான சிகிச்சை செய்த டாக்டரை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.

    இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாட்டாண்மை கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குள் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அந்த பெண்ணின் உறவினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் நுழைய முயன்றனர். அப்போது, அவர்களை போலீசார் அனுமதிக்காததால் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது, தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • ஆத்திரம் அடைந்த உக்கிரவேல் தனது மனைவி, மகனுடன் சேர்ந்து ஞானசெல்வத்தை தாக்கினர்.
    • பிரச்சினையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் போட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ஞானசெல்வம்.(வயது 47). விவசாயி. இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் உக்கிரவேல் என்பவருக்கும் வீட்டுமனை தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று இது தொடர்பாக பிரச்சினை வெடித்தது. ஆத்திரம் அடைந்த உக்கிரவேல் தனது மனைவி, மகனுடன் சேர்ந்து ஞானசெல்வத்தை தாக்கினர். படுகாயம் அடைந்த ஞானசெல்வம் பண்ருட்டிஅரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அங்கு நிலைமை மோசமாக ஞானசெல்வம் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபபட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    இவரது உடல் இன்று காலை சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. ஆத்திரம் அடைந்த ஞானசெல்வத்தின் உறவினர்கள் உடலை உக்கிரவேல் வீட்டுமுன்பு வைத்து போராட்டம் செய்தனர். இந்த பிரச்சினையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் போட்டனர். தகவல் அறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீஸ இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நந்தகோபால் விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் அவர்கள் சமரசம் ஆகவில்லை. இதனால் அங்குபதட்டம் நிலவியது. இதனை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். 

    • பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு ஹரிசங்கர் உறவினர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள கந்தசாமி பாளையம் பகுதியை சேர்ந்தவர் தூய்மை பணியாளர் ரவி. இவரது மகன் ஹரிசங்கர் (வயது 17). இவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் உணவு மற்றும் கேட்டரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஹரிசங்கர் லேத் பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசபட்டார். சிவகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட ஹரிசங்கர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தார்கள். ஹரிசங்கர் சாவுக்கு காரணமா னவர்களை கண்டறிந்து அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தினர்.

    இதனைத்தொடர்ந்து ஹரிசங்கர் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    உரிய பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி வேலை வாங்கிய லேத் உரிமையாளரை கைது செய்ய கோரி சிவகிரி போலீஸ் நிலையம் முன்பு ஹரிசங்கர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று வந்த ஹரிசங்கர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

    இதனையடுத்து நேற்று மாலை பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு ஹரிசங்கர் உறவினர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து பெருந்துறை உதவி போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் தலைமையான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உறவினர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனை ஏற்று உறவினர்கள் கலந்து சென்றனர்.

    இந்நிலையில் இதுவரை மாணவர் ஹரிசங்கர் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்சாவுக்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தால் தான் உடலை வாங்குவோம் என்று கூறி வருகின்றனர்.

    இதனால் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அங்கு குவிக்கப் பட்டுள்ளனர். 

    ×