என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

உயிரிழந்த அஜித்குமார்
போலீசார் விசாரணைக்கு சென்ற காவலாளி உயிரிழப்பு - உறவினர்கள் போராட்டத்தால் பதட்டம்
- அஜித்குமாரின் மனைவி மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
- நான் போலீஸ் நிலையத்துக்கு சென்று கையெழுத்து போட்டு விட்டு வெளியே வந்தபோது எனது அண்ணன் இறந்து விட்டதாக கூறினார்கள்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்து காளியம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி சாமி தரிசனம் செய்வார்கள். அதில் குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.
இந்நிலையில் இங்கு தனியார் நிறுவனம் மூலம் அதே பகுதியைச் சேர்ந்த பாலகுரு என்பவரது மகன் அஜித்குமார் (வயது 27) கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காவலாளியாக பணியில் சேர்ந்தார். திருமணமாகி மனைவி உள்ள நிலையில், ஒப்பந்த அடிப்படையில் பணியில் நியமிக்கப்பட்ட அவருக்கு தற்போது வரை சம்பளம் கூட தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை என்பதால் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அதில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி (75) என்பவர் தனது மகள் நிகிதா (48) என்பவருடன் சாமி கும்பிட காரில் வந்தார். காரை நிகிதா ஓட்டி வந்தார். மாற்றுத்திறனாளியான சிவகாமி நடக்க முடியாததால், காவலாளி அஜித்குமார் (27), கோவில் சார்பில் வைக்கப்பட்டிருந்த சக்கர நாற்காலியை எடுத்து கொண்டுவந்து கொடுத்தார்.
முன்னதாக சிவகாமிக்கு சொந்தமான 10 பவுன் நகைகளை ஒரு துணியில் சுற்றி கட்டைப்பையில் வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது காவலாளி அஜித்குமாரிடம் தனது காரை 'பார்க்கிங்' செய்யுமாறு நிகிதா தெரிவித்தார்.
இதையடுத்து தனக்கு கார் ஓட்ட தெரியாததால் மற்றொரு நபர் உதவியுடன் காரை அஜித்குமார் 'பார்க்கிங்' செய்துள்ளார். சுமார் 1 மணி நேர இடைவெளிக்கு பிறகு கோவிலில் வழிபாடு முடிந்து சிவகாமி, நிகிதா ஆகியோர் காரில் ஏறினர். அப்போது அங்கு பையில் சுருட்டி வைத்திருந்த துணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த 10 பவுன் நகையையும் காணவில்லை.
இதுபற்றி சிவகாமி மற்றும் நிகிதா ஆகியோர் காரை பார்க்கிங் செய்ய கார் சாவியை பெற்ற அஜித்குமாரிடம் கேட்டனர். ஆனால் தனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இதையடுத்து சிவகாசி 10 பவுன் நகை மாயமானது குறித்து திருப்புவனம் போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து அஜித்குமாரை போலீசார் திருப்புவனம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதையடுத்து போலீசார் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வெளியே வந்த அவரை, நேற்று தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணைக்காக அவர் உள்பட 5 பேரை காரில் அழைத்து சென்றனர். பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே அஜித்குமாருக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அஜித்குமாரை மட்டும் தங்களுடன் வைத்துக் கொண்டு மற்ற 4 பேரையும் போலீசார் விடுவித்து உள்ளனர்.
பின்னர் அஜித்குமாரை சிகிச்சைக்காக முதலில் சிவகங்கையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து உடல் நிலை மோசமானதாக கூறி அவரை மதுரை தனியார் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று பரிசோதித்தனர். அப்போது அஜித்குமார் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதுபற்றிய தகவல் உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்ட அஜித்குமாரின் மனைவி மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
நல்ல உடல் நிலையில் இருந்ததால்தான் அஜித்குமார் கோவில் காவலாளியாக பணியில் சேர்ந்தார். அவருக்கு உடலில் எந்தவித நோயோ, பிரச்சனையோ இல்லாதபோது, போலீசார் கடுமையாக தாக்கியதால் தான் உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு திருப்புவனம் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். பின்னர் அவர்கள் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் போலீஸ் நிலையத்திற்குள் சென்று கோஷங்கள் எழுப்பினர்.
அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி வெளியே அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கோவில் காவலாளியின் மர்மச்சாவு குறித்த தகவல் மாவட்டம் முழுவதும் காட்டுத்தீயாக பரவிய நிலையில் இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் மற்றும் திருப்புவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த அஜித்குமாரின் தம்பி நவீன் கூறியதாவது:-
நான் ராமநாதபுரத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தேன். அப்போது ஒரு நகை மாயமான புகாரில் போலீசார் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தி, எனது அண்ணனை அழைத்து சென்றதாக உறவினர்கள் போனில் தெரிவித்தனர். நான் வேலையை முடித்து விட்டு வர 4 மணியாகி விட்டது.
ஊருக்குள் வந்து நான் கேட்டபோது நகை தொலைந்ததாக பெண்கள் புகார் தெரிவித்து இருந்தனர். நானும், எனது தாயாரும் போலீஸ் நிலையத்துக்கு சென்றோம். அப்போது எனது அண்ணனை போலீஸ் நிலையத்துக்குள் வைத்து விசாரித்துக் கொண்டு இருந்தனர்.
எனவே காலையில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று நானும் எனது தாயாரும் வீட்டுக்கு வந்து விட்டோம். காலை 6 மணிக்கு 3 போலீசார் எங்கள் வீட்டுக்கு வந்தனர். நகையை எங்கே வைத்து இருக்கிறீர்கள் என்று கேட்டு பீரோவை திறந்து பார்த்தனர். எனது செல்போனை வாங்கிக் கொண்டு என்னை போலீசார் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.
அதன் பிறகு மேலும் 2 வாலிபர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றினார்கள். பின்னர் ஊருக்கு வெளியே உள்ள தோப்புக்கு எங்களை அழைத்து சென்றனர். அங்கு வைத்து எனது அண்ணனை அடித்தனர். என்னையும் அடித்தனர். சுமார் அரை மணி நேரம் எங்கள் இருவரையும் அடித்தனர்.
காலையிலும் மதியமும் போலீசார் சாப்பாடு வாங்கி கொடுத்தனர். மதியம் சாப்பாடு வாங்கி கொடுத்த பிறகும் எனது அண்ணனை மீண்டும் அடித்தனர். கடைசி வரை எனது அண்ணன் எனக்கு தெரியாது என்ற ஒரு வார்த்தையை மட்டும்தான் கூறினான். ஆனால் போலீசார் அதை ஒத்துக்கொள்ளவில்லை.
ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாமல் நகை இருக்கும் இடத்துக்கு கூட்டி செல்கிறேன் என்று சொன்னான். அப்படியாவது போலீசார் அடிப்பது குறையும் என்பதற்காக அப்படி சொன்னான். கோவிலுக்கு பின்னால் நகை இருக்கிறது என்று கூறியுள்ளான்.
இதனால் அவனை கோவிலுக்கு பின்புறம் அழைத்து சென்று போலீசார் பார்த்தனர். அங்கு நகை இல்லாததால் போலீசார் கோவிலின் பின்புறம் வைத்தும் அவனை அடித்து உள்ளனர்.
பின்னர் என்னை வாகனத்தில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அதன் பிறகு என் அண்ணனுக்கு என்ன நடந்தது, எங்கே அழைத்து சென்றார்கள் என்று தெரியவில்லை.
மாலை 6 மணியளவில் என்னிடம் போலீஸ் நிலையத்துக்கு வந்து கையெழுத்து போடுமாறு கூறினார்கள். நான் போலீஸ் நிலையத்துக்கு சென்று கையெழுத்து போட்டு விட்டு வெளியே வந்தபோது எனது அண்ணன் இறந்து விட்டதாக கூறினார்கள்.
எனது அண்ணனை போலீசார் அழைத்து சென்றிருக்க கூடாது. இப்படி எல்லாம் நடக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
என் அண்ணனுக்கு உடலில் எந்த பிரச்னையும் இல்லை போலீஸ் அடித்ததில் தான் உயிரிழந்துள்ளான். எனவே இதில் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும், அதன் மூலும் நீதி கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சூழலில் இறந்த அஜித்குமாரின் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அஜித் குமார் உயிரிழப்பு குறித்த விரிவான விசாரணைக்கு உத்தரவிட்ட பின்னரே உடலை பெற்றுக் கொள்வோம் என்று கூறி அவரது உறவினர்கள் திரண்டு நிற்கிறார்கள். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. எனவே அங்கும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






