செய்திகள்

கால்பந்து இறுதி போட்டிக்காக வியாசர்பாடியில் விழாக்கோலம்

Published On 2018-07-15 06:18 GMT   |   Update On 2018-07-15 06:18 GMT
வியாசர்பாடியில் இன்று இரவு பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதும் உலக கால்பந்து கால்பந்து இறுதி போட்டியை அகண்ட திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #WorldCupFinal
பெரம்பூர்:

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தாலும் உலக கால்பந்து போட்டி தொடங்கியதில் இருந்து அதன் மீது ரசிகர்கள் ஆர்வம் திரும்பியுள்ளது.

கால்பந்துக்கு கொல்கத்தாவில்தான் அதிக ரசிகர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக வடசென்னை பகுதியில் கால்பந்து மிகவும் பிரபலம். அங்கு கால்பந்து விளையாட்டுதான் இளைஞர்களிடம் பிரசித்தி பெற்றதாக உள்ளது.

வியாசர்பாடி முல்லை நகர், பக்தவச்சலம் காலனி, கொடுங்கையூர் கண்ணதாசன் நகர், புளியந்தோப்பு கன்னிகாபுரம் ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களில் தினமும் இளைஞர்கள் கால்பந்து பயிற்சியில் ஈடுபடுவதை காண முடியும். அந்த அளவுக்கு வடசென்னை கால்பந்து விளையாட்டுடன் ஒன்றிபோய் இருக்கிறது.

உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி இன்று இரவு நடக்கிறது. இதில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் பலப்பரீட்சை நடக்கின்றன. இதில் உலக கோப்பையை கையில் ஏந்தும் அணி எது என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

உலக கோப்பை போட்டி தொடங்கியது முதல் வட சென்னையில் ஒவ்வொரு போட்டியும் இளைஞர்கள் பார்த்து ரசித்து வருகிறார்கள். இன்று இரவு நடக்கும் இறுதி போட்டியை காண அவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இதற்காக குடிசை பகுதி குழந்தைகள் விளையாட்டு மற்றும் கல்வி மேம்பாட்டு மையம் சார்பில் வியாசர்பாடி முல்லை நகர் பஸ் நிலையம் அருகில் உள்ள மைதானத்தில் அகண்ட திரை அமைக்கப்பட்டு உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதற்காக அங்கு திரை அமைக்கும் பணி உள்ளிட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.



இதுகுறித்து நிர்வாகி தங்கராஜ் கூறும்போது, “வடசென்னை மக்களிடம் கால்பந்து ஒன்றிணைந்து விட்டது. குழந்தைகளிடம் கால்பந்து விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் 2006-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி அகண்ட திரையில் ஒளிபரப்பு செய்தோம். தற்போது 4-வது முறையாக ஒளிபரப்பு செய்ய இருக்கிறோம்” என்றார்.

இதே போல் ஹாரிங்டன் கால்பந்து அகடாமி ஐ.சி.எப். தெற்கு காலனியில் உள்ள பன்னோக்கு விளையாட்டு வளாகத்தில் கால்பந்து இறுதி போட்டி அகண்ட திரையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

பரபரப்பு மிகுந்த உலக கோப்பை இறுதிப்போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதால் வியாசர்பாடி உள்ளிட்ட வடசென்னை பகுதியில் விழா கோலம் பூண்டிருக்கிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள் அங்கு கூடுகிறார்கள். இதனால் இன்று இரவு உற்சாகம் கரைபுரண்டு ஓடும் என்பதில் சந்தேகமில்லை. #WorldCupFinal #FRACRO
Tags:    

Similar News