செய்திகள்

ஆந்திராவில் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் ஆறுதல்

Published On 2018-07-14 09:25 GMT   |   Update On 2018-07-14 09:25 GMT
ஆந்திராவில் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
சென்னை:

நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 46). மீனவர். இவர் தனது சக மீனவர்களான காத்தலிங்கம் (48), ஜெகதீசன் (26) உள்பட 9 மீனவர்களுடன் கடந்த 8-ந்தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றார்.

நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது நடுக்கடலில் ஆந்திர மீனவர்கள் இவர்களை சுற்றிவளைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வீரமுத்து, காத்தலிங்கம், ஜெகதீசன் உள்பட 6 பேருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் இருந்த அவர்களை சக மீனவர்கள் மீட்டு நெல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறும் மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.
Tags:    

Similar News