செய்திகள்

தி.மு.க. கட்சி பணியில் உதயநிதி ஸ்டாலின் தீவிரம்

Published On 2018-07-13 09:03 GMT   |   Update On 2018-07-13 09:03 GMT
தி.மு.க. கட்சிப் பணியில் உதயநிதி ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார். இதையொட்டி காஞ்சீபுரம் வடக்கு மாவட்டத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை 7 இடங்களில் அவர் கொடி ஏற்றுகிறார்.
சென்னை:

தி.மு.க.வில், செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தப்படியாக மகளிரணி செயலாளராக உள்ள கனிமொழி எம்.பி.யை அழைத்து பலர் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். ஆனால் இப்போது கனிமொழியை ஒரு சில மாவட்டச் செயலாளர்கள்தான் விழா நிகழ்ச்சிக்கு அழைக்கின்றனர். இதற்கு பதில் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி உள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் நடிகராக இருப்பதால் சினிமா துறையில் முழு கவனம் செலுத்தி வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் அவருக்கு முரசொலி பத்திரிகையின் நிர்வாக இயக்குனர் பொறுப்பு வழங்கப்பட்டது. கட்சியில் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.

ஆனாலும் அவரை கட்சி நிகழ்ச்சிகளுக்கு அவ்வப்போது மாவட்டச் செயலாளர்கள் அழைத்து செல்கின்றனர்.

அந்த வகையில் காவிரி பிரச்சனைக்காக போராட்டம், பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்களில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். கட்சி நிகழ்ச்சியிலும் மேடை ஏறி பேசி வருகிறார்.

இதுபற்றி அவரிடம், நீங்கள் அரசியலுக்கு வந்து விட்டீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு நான் அரசியலில் தான் இருக்கிறேன் என்றும் அவர் பதிலளித்து விரைவில் இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்படும் என்று கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது.

இந்த நிலையில் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளையொட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை (15-ந்தேதி) மாலை காஞ்சி வடக்கு மாவட்டச்செயலாளர் தா.மோ.அன்பரசன் உதயநிதி ஸ்டாலினை அழைத்து பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

குன்றத்தூர் ஒன்றியம் வஞ்சுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், திருத்தேரி, செங்கல்பட்டு, தையூர், நாவலூர் ஆகிய 7 இடங்களில் 75 அடி உயர பிரம்மாண்ட கொடி கம்பத்தில் உதயநிதி ஸ்டாலின் கொடி ஏற்றுகிறார். இந்த கொடி கம்பங்களின் பீடத்தில் கருப்பு கிரானைட் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு இடங்களில் கொடி ஏற்றியதும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். இளைஞரணி துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வெட்டுகளை திறந்து வைக்கிறார்.

அனைத்து நிகழ்ச்சிகளிலும் மாவட்டச் செயலாளர் தா.மோ. அன்பரசன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., தீர்மான குழு உறுப்பினர் மீ.அ.வைத்தியலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர். ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், அரவிந்த் ரமேஷ், மாவட்ட நிர்வாகிகள் துரைசாமி, விசுவநாதன், அன்புச் செழியன், கலைவாணி, சேகர், ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன், ஜெ.சண்முகம், தண்டபாணி, நரேந்திரன், இதயவர்மன், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட கழக செயலாளர் தா.மோ.அன்பரசன் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்.
Tags:    

Similar News