செய்திகள்

விவசாயிகளை ஏமாற்ற மத்திய அரசு தவறான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது- அன்புமணி

Published On 2018-07-05 09:47 GMT   |   Update On 2018-07-05 09:47 GMT
புதிய நெல் கொள்முதல் விலை நிர்ணயம் செய்ததில் மத்திய அரசு விவசாயிகளை ஏமாற்ற தவறான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நெல், நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட குறுவைப் பாசனப் பயிர்களுக்கான கொள்முதல் விலைகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது இப்போது கொள்முதல் விலை சற்று கூடுதலாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், மத்திய அரசு பெருமிதப்பட்டுக் கொள்வதைப் போல வேளாண் விளை பொருட்களுக்கு 50 சதவீதம் லாபம் கிடைக்கும் அளவுக்கு விலை உயர்த்தப்படவில்லை.

மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி 14 வகையான விளை பொருட்களுக்கு உற்பத்திச் செலவுடன் 50 சதவீதம் லாபம் சேர்த்து தான் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், புள்ளி விவரப் பயன்பாட்டுக்குத் தான் இது பொருத்தமாக இருக்குமே தவிர, எதார்த்தத்திற்கு எவ்வகையிலும் பொருந்தாது. எடுத்துக்காட்டாக சாதாரண ரக நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 1,550 ரூபாயிலிருந்து 1,750 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சன்னரக நெல்லுக்கான கொள்முதல் விலை 1,590 ரூபாயிலிருந்து 1,770 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண ரக நெல்லுக்கான உற்பத்திச் செலவு ரூ.1166 என்றும், அத்துடன் 50.09%, அதாவது ரூ.584 லாபம் சேர்த்து புதிய கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனினும், இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் உழவர்களை ஏமாற்றுவதற்காக திட்டமிட்டே தவறாக கணக்கிடப்பட்டிருக்கின்றன என்பது தான் உண்மை. நெல்லுக்கான உற்பத்திச் செலவாக அரசால் கணக்கிடப்பட்டுள்ள ரூ.1166 என்பது மிகவும் குறைவாகும்.

தமிழ்நாட்டில் நெல் உற்பத்திக்கான செலவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தான் கணக்கிடுகிறது. தமிழகத்தில் ஒரு குவிண்டால் நெல் உற்பத்தி செய்ய ரூ.1,549 செலவாகிறது. இதுவும் 2015-ம் ஆண்டு மதிப்பு தான். ஆண்டுக்கு 5 சதவீதம் உற்பத்தி செலவு அதிகரிப்பதாக வைத்துக் கொண்டாலும், நடப்பாண்டில் ஒரு குவிண்டால் நெல் உற்பத்திச் செலவு ரூ.1781 ஆக அதிகரித்திருக்க வேண்டும். அத்துடன் 50 சதவீதம் லாபம் சேர்த்தால் ஒரு குவிண்டால் நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ. 2671 ஆக அதிகரித்திருக்க வேண்டும்.

நிலக்கடலை தவிர மற்ற பயிர்களின் உற்பத்திச் செலவுகள் அனைத்துமே மிகவும் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பாசிப்பயறு விலை குவிண்டாலுக்கு ரூ.1400 அளவுக்கும், சூரியகாந்தி எண்ணெய் வித்து ரூ.1288 அளவுக்கும், பருத்தி ரூ.1130 அளவுக்கும், ராகி விலை ரூ.997 அளவுக்கும் உயர்த்தப்பட்டிருப்பது வரலாறு காணாத ஒன்றாகும்.

ஆனால், அவற்றின் விலையும் உண்மையான உற்பத்திச் செலவுடன் 50 சதவீதம் லாபம் சேர்த்து நிர்ணயிக்கப்படவில்லை என்பது தான் உண்மையாகும்.

எனவே, மத்திய அரசு உற்பத்திச் செலவுகளில் நிலையான செலவு, நிர்வாகச் செலவு ஆகியவற்றையும் சேர்த்து கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும்.

தமிழக ஆட்சியாளர்கள் தமிழகத்தில் நெல் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்திச் செலவாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் எவ்வளவு தொகை நிர்ணயித்துள்ளதோ, அந்த பட்டியலை மத்திய அரசிடம் அளித்து, அதனுடன் 50 சதவீதம் லாபம் சேர்த்து கொள்முதல் விலையை தீர்மானிக்கும்படி வலியுறுத்த வேண்டும். அதை ஏற்க மத்திய அரசு மறுத்தால், வித்தியாசத் தொகையை தமிழக அரசே ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும். தமிழகத்தில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்தது ரூ.2500 கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News