செய்திகள்

திருச்சி சாலையில் அதிகரிக்கும் விபத்துகள் - போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

Published On 2018-06-20 11:25 GMT   |   Update On 2018-06-20 11:25 GMT
திருச்சி சாலையில் அதிகரித்து வரும் விபத்துக்கான காரணம் குறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, அதிகாரிகளுடன் ஆய்வு நடத்த உள்ளார்.
கோவை:

கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் சமீப காலமாக விபத்துகள் அதிகரித்து வருகிறது.  குறிப்பாக திருச்சி சாலையில் பாப்பம்பட்டி பிரிவு அருகே உள்ள சிந்தாமணி பிரிவில் தொடங்கி சூலூர், காங்கேயம்பாளையம் வரை சாலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை வாகன விபத்துகளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருச்சி சாலையில் பாதுகாப்பற்ற பகுதியாக கருதப்படும் இந்த குறிப்பிட்ட 8 கிலோ மீட்டர் சாலை மிகவும் குறுகலான இருவழிச்சாலையாகவே உள்ளது. சாலையின் அகலத்துக்கு ஏற்ப இல்லாமல் தினந்தோறும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இச்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் பல முறை வலியுறுத்தினர். ஆனால் இதுவரை அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாலையை விரிவாக்கம் செய்தால் தான் விபத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் தற்போது அதிகாரிகள் உணரத் தொடங்கி உள்ளனர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த சாலையில் ஆய்வு நடத்தினர்.

மையத்தடுப்புகள் இல்லாத இச்சாலையில் விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டது.

இன்று கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி, தேசிய நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை அதிகா ரிகளுடன் சென்று இந்த சாலையில் ஆய்வு நடத்த உள்ளார். இதில் விபத்துகளை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளனர்.
Tags:    

Similar News