செய்திகள்

சாமி சிலை கடத்தல் வழக்கு: தந்தை-மகனை கைது செய்ய மதுரை ஐகோர்ட்டு தடை

Published On 2018-06-06 10:05 GMT   |   Update On 2018-06-06 10:05 GMT
சாமி சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக தந்தை, மகனை கைது செய்ய தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மதுரை:

மும்பை அந்தேரி மேற்கு பகுதியை சேர்ந்த வல்லபபிரகாஷ், அவரது மகன் ஆதித்யகுமார் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள வீரசோழபுரம் என்ற கிராமத்தில் அர்த்தநாதீஷ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த சிலைகள் திருடப்பட்டு கடத்தப்பட்டது.

இதுதொடர்பாக எங்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சிலைகளில் சிலவற்றை அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் பகுதியில் உள்ள அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூர் என்பவருக்கு இந்த சிலை கடத்தலில் நாங்கள் உதவி செய்ததாக போலீசார் கூறியுள்ளனர். நாங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க உள்ளோம்.

வல்லபபிரகாஷ் ஆகிய எனக்கு 87 வயது ஆகிறது. என் உடல்நிலையை கருத்தில் கொண்டு இவ்வழக்கில் எங்களுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண் டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்களுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்று அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மனுதாரர்கள் மீது எத்தனை வழக்குகள் உள்ளன. மேலும் எத்தனை வழக்குகளில் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீ சார் சந்தேகிப்பது குறித்து கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று அரசு தரப்புக்கு நீதிபதி உத்தர விட்டார்.

பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 11-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அதுவரை மனுதாரர்களை கைது செய்ய தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News