செய்திகள்

குப்பை கொட்ட எதிர்ப்பு- அரசு பஸ்சை சிறை பிடித்து பெண்கள் போராட்டம்

Published On 2018-05-24 09:57 GMT   |   Update On 2018-05-24 09:57 GMT
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் சேரும் குப்பை கழிவுகளை பூங்கா திடல் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் கொட்ட நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் சேரும் குப்பைக் கழிவுகள் எடப்பாளையம் கிராமத்தில் கொட்டப்பட்டு வருகிறது. அதனை சுத்திகரிப்பு செய்ய இடம் தேர்வு செய்யப்பட்டதால் அங்கு மலைபோல் குப்பைகள் குவிந்துள்ளன.

இந்த நிலையில் 15-வது வார்டு எம்.ஜி.எம். நகரில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பூங்கா திடல் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் பூங்கா திடல் அமைப்பதற்கான எந்த பணியும் நடைபெறவில்லை.

இதற்கிடையே திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் சேரும் குப்பை கழிவுகளை பூங்கா திடல் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் கொட்ட நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த அந்த பகுதி பெண்கள், குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆவடி, திருவள்ளூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குப்பை கொட்டப்படும் இடம் குறித்து உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொது மக்கள் கலைந்து சென்றனர். #Tamilnews
Tags:    

Similar News