செய்திகள்

கூடலூரில் குப்பையில் வீசப்பட்ட கர்ப்பிணிகளுக்கான மருந்து

Published On 2018-05-17 14:54 GMT   |   Update On 2018-05-17 14:54 GMT
கூடலூரில் கர்ப்பிணிகளுக்கு வழங்க வேண்டிய மருந்து குப்பையில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூரில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க வேண்டும் என உத்தரவு இருந்தும் டாக்டர்கள் வராத காரணத்தால் அது நடைமுறையில் இல்லாமல் உள்ளது. பெரும்பாலான டாக்டர்கள் தங்கள் கிளீனிக்கிலேயே இருந்து விடுகின்றனர். வாரத்தில் 2 நாட்களுக்கு மட்டும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊசி போட்டு மற்ற நாட்களில் வரும் நோயாளிகளை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விடுகின்றனர்.

இதனிடையே 8-வது வார்டு நடுத்தெரு பகுதியில் கர்ப்பிணிகளுக்கு வழங்கும் ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்புக்கரைசல் மருந்து ஏராளமான அளவு குப்பையில் வீசப்பட்டு இருந்தது.

இந்த மருந்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கும் இலவச கரைசல் ஆகும். அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உரிய காலத்தில் வழங்கப்படாமல் காலாவதியாகி விட்டதால் அவை குப்பையில் வீசப்பட்டு இருந்தன. இந்த மருந்துகளின் பயன்பாடு கடந்த பிப்ரவரி மாதத்திலேயே முடிந்து விட்டது. உரிய நேரத்தில் நோயாளிகளுக்கு வழங்காமல் வீணாக குப்பையில் வீசப்பட்டதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து சென்றனர்.

இது குறித்து மருத்துவ துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News