செய்திகள்

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதை எதிர்த்து வழக்கு

Published On 2018-05-10 07:49 GMT   |   Update On 2018-05-10 07:49 GMT
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு தடைவிதிக்கக்கோரி டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். #Jayaalithaa #TrafficRamasamy #HighCourt
சென்னை:

சென்னை ஐகோர்ட்டு கோடை விடுமுறைகால நீதிபதிகள் பார்த்திபன், ஆதிகேசவலு ஆகியோர் இன்று அவசர வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்கள்.

அப்போது, டிராபிக் ராமசாமி ஆஜராகி, ‘முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல், சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கடலோர ஒழுங்கு முறை சட்டத்துக்கு எதிராக, கடற்கரைக்கு மிக அருகில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டக்கூடாது என்று ஏற்கனவே, நான் உள்பட பலர் வழக்கு தொடர்ந்தோம். ஆனால், என் தரப்பில் வக்கீல் ஆஜராகவில்லை என்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று நான் விடுத்த கோரிக்கையை ஐகோர்ட்டு ஏற்றுக் கொண்டது. தற்போது அந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், அரசு செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்த கட்டிட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா, கடந்த சில நாட்கள் முன்பு நடந்தது. இதில், முதல்அமைச்சர், துணை முதல்அமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். வழக்கு நிலுவையில் இருக்கும் போது அரசு செலவில் நினைவிடம் பணியை மேற்கொள்வது ஐகோர்ட்டை அவமதிக்கும் செயல். இதுதொடர்பாக நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த வழக்கை அவசர வழக்காக இப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும்’ என்று கூறினார்.

அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை. உங்களது வழக்கை முதல் வழக்காக விசாரணைக்கு ஏற்க முடியாது. கடைசி வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்று கூறினார்.  #Jayaalithaa #TrafficRamasamy #HighCourt
Tags:    

Similar News