செய்திகள்

குடிநீர் கேட்டு போராட்டம்: மேல்நிலை தொட்டி மீது ஏறி 10 பேர் தற்கொலை மிரட்டல்

Published On 2018-04-24 18:05 GMT   |   Update On 2018-04-24 18:05 GMT
சேந்தமங்கலம் அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மேல்நிலை குடிநீர் தொட்டிமேல் ஏறி நின்று 10 ஆண்கள் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேந்தமங்கலம்:

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஒன்றியம் கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சி வடுகப்பட்டி உப்பிலிய தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சுமார் 3 மாதங்களாக குடிநீர் வினியோகம் முறையாக செய்யப்படாமல் பற்றாக்குறை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்குள்ள சுமார் 40 அடி உயரம் கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அடிப்பகுதியில் நின்று தண்ணீர் கொடு, தண்ணீர் கொடு என கோஷமிட்டனர்.

அப்போது திடீரென்று அப்பகுதியை சேர்ந்த இளங்கோ (வயது 36), சதீஸ்குமார் (28), நல்லதம்பி (27), மனோகரன் (30), மணி (26) உள்பட 10 ஆண்கள் அங்கு வந்து குடிநீர் தொட்டியின் மேல் ஏறினர். பின்னர் மேலே இருந்து கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிலர் சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பொன்செல்வராஜ் மற்றும் போலீசார், கிராம நிர்வாக அலுவலர் சுதர்சனன் ஆகியோர் அங்கு வந்து, தற்கொலை மிரட்டல் விடுத்தவர்களை கீழே இறங்க கூறினர். பின்னர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 5 பேர் மட்டும் சேந்தமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று குடிநீர் பிரச்சினை சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலர் முனியப்பனிடம் முறையிடலாம் என அறிவுறித்தினர். அதைத்தொடர்ந்து குடிநீர் தொட்டி மேலே இருந்து ஒருவர் பின் ஒருவராக கீழே இறங்கினர். இந்த சம்பவத்தால் நேற்று அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  
Tags:    

Similar News