செய்திகள்

கை-கால்களை கட்டிப்போட்டு நிதிநிறுவன அதிபரை காரில் கடத்திய கும்பல்

Published On 2018-04-24 12:42 GMT   |   Update On 2018-04-24 12:42 GMT
துறையூர் தொழில் அதிபரை கை, கால்களை கட்டிப்போட்டு 6 பவுன் தங்க சங்கிலி மற்றும் செல்போன்களை பறித்து சென்ற மர்ம கும்பல் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:

துறையூர் அருகே கோனேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தனபால் (வயது 54). தொழில் அதிபர். திருச்சி, முசிறி உள்ளிட்ட பகுதிகளில் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார்.

இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் மேட்டுப் பாளையத்தில் இருந்து கோனேரிப்பட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 5 பேர் கும்பல் தனபாலை வழி மறிந்தனர். அவரை குண்டுகட்டாக தூக்கி காரில் போட்டனர். அவர்களில் ஒருவன் போலீஸ் சீருடை அணிந்திருந்தான். அவர்கள் தனபாலிடம் உங்கள் மீது புகார் வந்துள்ளது. எனவே உங்களை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்து செல்கிறோம் என்றனர். மேலும் சத்தம் போட்டால் குத்தி கொன்று விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர்.

பின்னர் கார் பெரம்பலூர் அருகே வந்தபோது தனபாலிடம் அக்கும்பல் உங்களை பணத்துக்காக கடத்தி செல்கிறோம் என்று கூறினர். இதற்கிடையே தனபால் செல்போனுக்கு அடிக்கடி அழைப்பு வந்தது. இதனால் பயந்து போன கடத்தல் கும்பல் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புதிய எடைக்கல் கிராமத்துக்கு சென்று அவரை கை-கால்களை கட்டிப்போட்டு அவர் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலி மற்றும் அவர் வைத்திருந்த செல்போனையும் பறித்து கொண்டு அவரை சாலையோரம் வீசிவிட்டு சென்று விட்டனர். கிராம மக்கள் தனபாலை மீட்டனர். பின்னர் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்தார். தொழில் அதிபர் தனபாலை கடத்தியது வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களா? அல்லது தொழில் போட்டி காரணமாகவா? அல்லது முன் விரோதத்தில் கடத்தப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News