செய்திகள்

விலைமதிப்பற்ற மனித உயிர் இழப்புகளைத் தவிர்க்க உதவ வேண்டும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

Published On 2018-04-22 20:05 GMT   |   Update On 2018-04-22 20:05 GMT
‘பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை முழுமையாகக் கடைப்பிடித்து, விலைமதிப்பற்ற மனித உயிர் இழப்புகளைத் தவிர்க்க உதவ வேண்டும்’ என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
சென்னை:

‘பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை முழுமையாகக் கடைப்பிடித்து, விலைமதிப்பற்ற மனித உயிர் இழப்புகளைத் தவிர்க்க உதவ வேண்டும்’ என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாலைப் பாதுகாப்பு வார வாழ்த்துச் செய்தியில் கூறி உள்ளார்.

இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சாலைப் பாதுகாப்பு வார வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

பொது மக்களிடையே சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘சாலைப் பாதுகாப்பு வாரம்’ இன்று (நேற்று) முதல் வரும் 30-ந்தேதி வரை கடைப்பிடிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு 29-வது சாலைப் பாது காப்பு வார விழா, ‘சாலைப் பாதுகாப்பு உயிரின் பாதுகாப்பு’ என்ற கருப்பொருளை மையப்படுத்துகிறது. சில சமயம் சாலை விபத்துகளினால் பொருளட்டும் நபர்களை குடும்பங்கள் இழந்து வாடுகின்றன. அதனால் அக்குடும்பங்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்பட்டு, பொருளாதார ரீதியாகவும் மிகுந்த துயரங்களுக்கு ஆளாகின்றனர்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, பாதுகாப்பான சாலைப் பயணத்தை உறுதி செய்யும் வகையில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் விழிப்புணர்வு முகாம்களை நடத்த மாவட்ட கலெக்டர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அகில இந்திய வானொலி பண்பலை சேவைகளின் மூலம் நாள் தோறும் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை ஒலிபரப்பு செய்யப்படுவதுடன், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் கூடுதல் அவசர விபத்து சிகிச்சை மையங்கள் ஏற்படுத்துப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் நெடுஞ்சாலை ரோந்து குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு இரவு, பகலாக போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கும் வாகனங்களை அப்புறப்படுத்த மீட்பு வாகனங்கள் வழங்குதல் போன்ற திட்டங்களை சீரிய முறையில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் 2016-ம் ஆண்டைவிட 2017-ம் ஆண்டு சாலை விபத்துகள் 8.22 சதவிகிதம் குறைந்துள்ளதுடன், சாலை விபத்துகளினால் ஏற்படும் இறப்புகள் 6.16 சதவிகிதம் குறைந்துள்ளது.

பல்வேறு விபத்து தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டாலும், ‘வேகம் விவேகமன்று’ என்பதை உணர்ந்து, மிதமான வேகத்துடன் அனைவரும் கவனமாக சாலை விதிகளை கடைப்பிடித்தால் மட்டுமே விபத்தில்லா பயணம் சாத்தியமாகும். எனவே, மக்கள் அனைவரும் சாலை விதிகளை முழுமையாகக் கடைப்பிடித்து, விலைமதிப்பற்ற மனித உயிர் இழப்புகளைத் தவிர்க்க உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். 
Tags:    

Similar News