செய்திகள்

பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் இன்று மாலை புகார் மனு பெறப்படும்- சந்தானம் பேட்டி

Published On 2018-04-21 08:44 GMT   |   Update On 2018-04-21 08:44 GMT
பேராசிரியை நிர்மலா தேவி மீதான புகார் தொடர்பாக இன்று மாலை பல்கலைக்கழகம் சென்று விசாரணை நடத்த உள்ளதாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தெரிவித்தார். #officersanthanam #nirmaladevi

மதுரை:

பேராசிரியை நிர்மலா தேவி மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த கவர்னரால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் மதுரை வந்து விசாரணை நடத்தி வருகிறார்.

முதல் நாள் காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை, பதிவாளர் சின்னையா மற்றும் சிலரிடம் விசாரணை நடத்தினார்.

2-வது நாளான நேற்று அருப்புக்கோட்டை சென்று பேராசிரியை நிர்மலா தேவி வேலை பார்த்த தேவாங்கர் கல்லூரியில் விசாரணை நடத்தினார்.

இன்று தனது 3-வது நாள் விசாரணையை மதுரை விருந்தினர் மாளிகையில் உள்ள அலுவலகத்தில் அதிகாரி சந்தானம் தொடங்கினார்.

ஏற்கனவே இந்த வழக்கில் புகார் தெரிவிக்க விரும்புபவர்கள் 21-ந் தேதி (இன்று) மனு அளிக்கலாம் என அவர் அறிவித்திருந்தார். ஆனால் இன்று பகல் 1 மணி வரை யாரும் புகார் மனு அளிக்க வரவில்லை.

தொடர்ந்து விசாரணை அதிகாரி சந்தானம், நிருபர்களிடம் கூறியதாவது:-

பேராசிரியை நிர்மலா தேவி மீதான புகார்கள் தொடர்பாக நாங்கள் தொடங்கிய விசாரணையில், அருப்புக்கோட்டை கல்லூரியில் எங்கள் விசாரணை முடிந்து விட்டது.


இன்று பொதுமக்கள் மனுக்கள் அளிக்க அறிவுறுத்தி இருந்தோம். ஆனால் யாரும் மனு கொடுக்கவில்லை. இன்று மாலை 3 மணிக்கு மேல் காமராஜர் பல்கலைக்கழம் சென்று விசாரணை நடத்த உள்ளேன்.

பேராசிரியர்கள், பல்கலைக்கழக உறுப்பினர்களிடம் புகார் மனு பெறப்படும். இத்தோடு எங்களின் முதல் கட்ட விசாரணை முடிகிறது.

எங்களது 2-ம் கட்ட விசாரணை வருகிற 25, 26-ந் தேதிகளில் மதுரை விருந்தினர் மாளிகை அலுவலகத்தில் நடக்கிறது. அப்போது புகார் தெரிவிப்பவர்கள் மனு கொடுக்கலாம்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் இருக்கும் பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்துவது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் கேட்டுள்ளோம். அவர்களது பதிலுக்கு பின் விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews  #officersanthanam #nirmaladevi

Tags:    

Similar News