செய்திகள்

பேராசிரியை நிர்மலா தேவியிடம் இரண்டாவது நாளாக போலீசார் தீவிர விசாரணை

Published On 2018-04-17 04:37 GMT   |   Update On 2018-04-17 04:47 GMT
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியிடம் இண்டாவது நாளாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #NirmalaDevi
விருதுநகர்:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட அரசு நிதி உதவி பெறும் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணித துறை உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வருபவர் நிர்மலாதேவி (வயது46). இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகள் 4 பேரிடம் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு தரும்படி போனில் வற்புறுத்திய ஆடியோ சமீபத்தில் வெளியானது.

இது சமூக வலைதளங்களில் பரவியதால் தமிழக கல்வித்துறை வரலாற்றில் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் கொடுத்த புகாரின்பேரில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் பேராசிரியையாக நிர்மலாதேவி சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சார்பில் இது தொடர்பாக விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, நிர்மலா தேவி மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று அவரை அதிரடியாக கைது செய்தனர். இதனை அடுத்து, ஏ.டி.எஸ்.பி மதி அவரிடம் விசாரணையை தொடங்கினார்.

இரண்டாவது நாளான இன்றும் நிர்மலா தேவியிடம் மதி விசாரித்து வருகிறார். நிர்மலா தேவி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும், முழு விசாரணையும் வீடியோ பதிவு செய்யப்படுகின்றதாகவும் மதி தெரிவித்துள்ளார். #NirmalaDevi #TamilNews
Tags:    

Similar News