செய்திகள்

காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வை மத்திய அரசு ஏற்படுத்தும்- பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2018-04-15 03:15 GMT   |   Update On 2018-04-15 03:15 GMT
“காவிரி பிரச்சினையில் ஒரு நிரந்தர தீர்வை மத்திய அரசு நிச்சயம் ஏற்படுத்தும்“ என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாகர்கோவில்:

இதுதொடர்பாக அவர் நேற்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திரைப்பட இயக்குனர் பாரதிராஜா போன்றவர்களின் திரையுலக சாதனைகளை பார்த்து நான் மலைத்து போய் இருக்கிறேன். அவரது ஒவ்வொரு திரைப்படமும் மண் வாசனையோடு அமைந்திருந்தது. அவருக்கென்று ஒரு மரியாதை திரையுலகத்தில் இருக்கிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக திரைப்பட துறையை சேர்ந்த பலர் தவறான புரிதலின் காரணமாக, உண்மைக்கு புறம்பாக நின்று போராட்டம் நடத்தியது வேதனையை தருகிறது.

பாரதிராஜா உண்மையை புரிந்து செயல்பட வேண்டும் என்பதை எனது வேண்டுகோளாக வைக்கிறேன். போலி அரசியல் ஆதாயம் தேடுபவர்களோடு நீங்கள் இணைந்திருப்பது வேதனை தருவதாக உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதற்காக போராடுவது தவறு கிடையாது. ஆனால் அந்த போராட்டம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில், பொது சொத்துக்களை அழிக்கும் வகையில் அமையும் என்றால் அதை நிச்சயமாக யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பிரதமர் நரேந்திரமோடியின் அரசாங்கம் தமிழகத்தில் ஏராளமான தொழில்களை கொண்டுவர, ஏராளமான முதலீடுகளை கொண்டுவர வேண்டும், வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும் என்ற சிந்தனையோடு பல முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் நமது ராணுவத்துக்கு தேவையான தளவாடங்களை தமிழ்நாட்டிலேயே உருவாக்க வேண்டும் என்ற முயற்சியின்பேரில் அதற்காக நடத்தப்பட்டதுதான் ராணுவ கண்காட்சி.

உலக அளவில் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் வரக் கூடிய நிகழ்ச்சியாகவும், ஏராளமான முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய ஒரு நிகழ்ச்சியாகவும் அது அமைந்திருந்தது. அதற்கு கருப்பு கொடி காட்டுகிறார்கள் என்று சொன்னால் என்ன அர்த்தம்? தமிழகத்துக்கு எதுவும் வரக்கூடாது என்று சொன்னால் இளைஞர்களின் நிலை என்ன?. இம்மாதிரியான போராட்டம் நரை விழுந்தவர்களின் போராட்டம். இளைஞர்கள் தமிழகத்தில் தொழில் பெருக வேண்டும் என்று விரும்புகிறார்கள். உலகத்திலேயே முதல் மகனாக தமிழ்மகன் வரவேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.

அதை வேண்டாம் என்று சொல்வதற்கு அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? கருப்பு கொடி போராட்டம் நடத்தியவர்கள் எவ்வளவு உண்மைகளை புறந்தள்ளிவிட்டு இந்த போராட்டத்தை நடத்தினார்கள். அவர்கள் சொல்வது அவ்வளவும் உண்மைக்கு மாறானது.

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் வந்தாக வேண்டும். அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. காவிரி பிரச்சினையில் ஒரு நிரந்தர தீர்வை மத்திய அரசு நிச்சயம் ஏற்படுத்தும். தமிழக மக்களுக்கு நியாயம் கிடைக்க பிரதமர் நடவடிக்கை எடுப்பார்.

கிரிக்கெட் பார்க்கச்சென்ற பெண்களிடம் அநாகரிகமான முறையில் சிலர் நடந்து கொண்டது மோசமான செயல். அவ்வாறு நடந்து கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தகுந்த தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து.

இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார். #tamilnews
Tags:    

Similar News