செய்திகள்

ரஜினியை சூப்பர்ஸ்டார் ஆக்கியது தமிழகம்- தமிழிசை

Published On 2018-04-09 07:50 GMT   |   Update On 2018-04-09 07:50 GMT
கர்நாடகத்தில் பிறந்த ரஜினியை சூப்பர்ஸ்டார் ஆக்கியது தமிழகம் தான் என காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது குறித்து அவர் பேசியதற்கு தமிழிசை பதில் அளித்துள்ளார்.
சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நடிகர்- நடிகைகள் நேற்று மவுன போராட்டம் நடத்தினார்கள்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் ரஜினி, காவிரி விவகாரம், துணைவேந்தராக கன்னடரான சூரப்பா நியமனத்தால் தமிழர்களின் கோபத்துக்கு மத்திய அரசு ஆளாகும் என்று கடுமையாக விமர்சித்தார்.

அதேபோல் போராட்ட நிறைவில் நடிகர் சத்யராஜ் ஆவேசத்துடன் “நான் என்றும் தமிழர் பக்கம்தான். தமிழ் உணர்வில்லாதவர்கள் ஓடிவிடுங்கள். நான் எதற்கும் அஞ்சமாட்டேன். ராணுவமே வந்தாலும் பயப்படமாட்டேன்” என்று பேசினார்.

வேளச்சேரியில் நேற்று இரவு நடைபெற்ற தாமரை யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை, “ரஜினி, சத்யராஜிக்கு தக்க பதிலடி கொடுத்தார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

காவிரி பிரச்சினையில் பா.ஜனதா அரசுதான் துரோகம் இழைத்ததுபோல் நடிகர், நடிகைகள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.

ரஜினி பேசும்போது, கன்னடரான சூரப்பாவை துணைவேந்தராக நியமிக்கலாமா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

ரஜினி ஒன்றை நினைத்து பார்க்க வேண்டும். முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கன்னடர் ரஜினி என்று தமிழர்கள் ஏற்றுக் கொண்டிருக்காவிட்டால் சூப்பர் ஸ்டார் ஆகி இருக்க முடியுமா? வந்தாரை வாழ வைப்பவர்கள் தமிழர்கள். பாகுபாடு பார்க்காத பண்புக்கு சொந்தக்காரர்கள். அந்த பண்பை கொச்சைப்படுத்தாதீர்கள்.

துணைவேந்தர்கள் தேர்வுக்கு அகில இந்திய அளவில் விண்ணப்பிக்கலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்ததே அ.தி.மு.க. அரசுதான் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். துணைவேந்தர் நியமனத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை.

இன்னொரு நடிகர் (சத்யராஜ்) ராணுவமே வந்தாலும் பயப்பட மாட்டேன் என்று பேசி இருக்கிறார். ராணுவத்துக்கே பயப்படாதவர்கள் ஐ.டி. ரெய்டு நடந்தால் பயந்து நடுங்குவது ஏன் என்று புரியவில்லை.



தான் நடித்த ‘பாகுபலி’ படம் ஓட வேண்டும் என்றால் பெங்களூருக்கு சென்று மன்னிப்பு கேட்ட தன்மான தமிழரின் வீரம் புல்லரிக்கிறது.

தொலைத்து விட்ட காவிரித்தாயை தேடி மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார். தொலைத்தவர்கள் யார்? தொலைத்தவர்களே தேடுவது வேடிக்கையாக உள்ளது.

1954-லேயே சைதாப்பேட்டையில் ஒரு காவிரித்தாய் சிலையை வைத்தார்கள். அப்போது அண்ணா சொன்னார், ‘தமிழகத்துக்கு காவிரி தண்ணீர். கூவத்தில் பன்னீர்’ என்று. அதன்பிறகு அந்த சிலையையும் கண்டு கொள்ளவில்லை. காவிரியையும் கண்டு கொள்ளவில்லை.

50 வருடத்துக்கும் மேலாக தொடரும் இந்த பிரச்சினையை கண்டிப்பாக நாங்கள் அப்படி இழுத்தடிக்க மாட்டோம். நிரந்தர தீர்வை ஏற்படுத்துவோம்.

மு.க.ஸ்டாலின் காவிரிக்காக தியாகம் செய்து கைதாகவில்லை. துரோகம் செய்து விட்டுதான் கைதாகி இருக்கிறார்.

இப்போது காவிரிக்காக வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கவும் தயாராகி விட்டதாக கூறுகிறார்.

வாழ்நாள் முழுவதும் ஜெயிலில் இருக்க வேண் டாம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஜெயிலில் இருங்கள். நாங்கள் நீண்ட நாள் ஜெயிலில் இருக்க விட மாட்டோம்.

தமிழ்நாட்டுக்கு பா.ஜனதாவால்தான் காவிரி தண்ணீரை கொண்டு வர முடியும்.

இவ்வாறு அவர் பேசினார். #tamilnews
Tags:    

Similar News