செய்திகள்

ஊட்டியில் 2-வது நாளாக ஆலங்கட்டி மழை

Published On 2018-04-02 11:25 GMT   |   Update On 2018-04-02 11:25 GMT
ஊட்டியில் 2-வது நாளாக ஆலங்கட்டி மழையால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 1 வாரமாக பரவலாக மழை பெய்தது. நேற்று முன் தினம் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்நிலையில் நேற்று மாலையும் கருமேகங்கள் திரண்டு ஆலங்கட்டி மழையாக பெய்தது. இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர். சிலர் ஆலங்கட்டியை கையில் எடுத்து மகிழ்ந்தனர்.

சாலைகளில் வெள்ளம் பெருக்கொடுத்து ஓடியது. இந்த மழையால் ஜில்லென்று காற்று வீசி வருகிறது. இதமான சீதோஷ்ண நிலையை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனுபவித்து வருகிறார்கள்.

வனப்பகுதியில் உள்ள ஆறு, ஏரி, குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் கணிசமான அளவுக்கு தேங்கியுள்ளதால் வனவிலங்குகளுக்கு போதுமானதாக உள்ளது. இதனால் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவது தடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழை விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இதேபோன்று வால்பாறையில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்தது.

வால்பாறை பகுதியில் கடந்த ஒரு மாதமாகவே அவ்வப்போது விட்டு விட்டு ஒரு சில எஸ்டேட் பகுதிகளில் லேசான மழையும் பல எஸ்டேட் பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவியது. இந்நிலையில் நேற்று மதியம் வால்பாறை நகர் பகுதி மற்றும் ஒருசில எஸ்டேட் பகுதிகளில் இடியுடன் லேசான மழை பெய்தது.

கோவையில் நேற்று மாலை இடி-மின்னலுடன் குளிந்த காற்று வீசியது. இதனையடுத்து ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது. வெப்பம் தாக்கி பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் திடீரென தட்பவெப்ப நிலை மாறி இதமான சீதோஷ்ண நிலை நிலவியது.

Tags:    

Similar News