செய்திகள்

காலியாக உள்ள போலீஸ் சூப்பிரண்டு பதவிகளை நிரப்ப வேண்டும் - கவர்னரிடம் பா.ஜனதா மனு

Published On 2018-03-22 10:46 GMT   |   Update On 2018-03-22 10:46 GMT
புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள 9 போலீஸ் சூப்பிரண்டு பதவிகளை நிரப்ப வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடியிடம் பா.ஜனதா மனு கொடுத்துள்ளது.
புதுச்சேரி:

புதுவை மாநில பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில துணை தலைவர் ஏம்பலம் செல்வம் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில வக்கீல் அணி அசோக்பாபு, பிற்படுத்தப்பட்டோர் பிரிவு அகிலன், மாநில இளைஞரணி தலைவர் மவுலித்தேவன் மற்றும் நிர்வாகிகள் கவர்னர் கிரண்பேடியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசு காவல் துறையில் 9 போலீஸ் சூப்பிரண்டுகள் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மாநிலத்தில் அடிக்கடி சீர்குலைகிறது. தகுதி வாய்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்களின் பணி மூப்பு அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு பதவிகளை நிரப்புவதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுபோல் புதுவை அரசு பணிகளில் 16 குடிமை பணி (பி.சி.எஸ்.) அதிகார பதவிகள் தொடர்ந்து நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் ஒரே உயர்நிலை அதிகாரிக்கு 3 துறைகளுக்கான பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அரசு அதிகாரிகளின் கூடுதல் பணி சுமை ஏற்படுவதோடு அத்துறைகளின் மீது முழு கவனம் செலுத்த இயலவில்லை. அமைச்சகத்தின் முடிவுகளும், அரசின் திட்ட பலன்களும் பொதுமக்களுக்கு முழுமையாக முறையாக சென்றடைவதில்லை. மேலும் மக்கள் நலப்பணிகள் செயல்படுத்தப்படாமல் முடக்கப்படுகின்றது.

அரசில் பணிபுரியும் ஒரு தாழ்த்தப்பட்ட அதிகாரிக்கு இணை செயலாளர் பதவி உயர்வு அளிக்கப்படக் கூடாது என்பதற்காக பணி மூப்பு அடைந்த பல அதிகாரிகள் பதவி உயர்வு பெறாமலேயே பணி ஓய்வு பெறும் சூழ்நிலையை காங்கிரஸ் அரசு ஏற்படுத்தி இருக்கிறது.

இப்போக்கினால் பல நல்ல நேர்மையான அதிகாரிகளும், திறமையான அதிகாரிகளும் முறையே சார்பு செயலர், துணை செயலர், இணை செயலர் பதவிகள் கிடைக்காமல் போவதை தடுத்து நிறுத்திட உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டு உரிய நேரத்தில் உள்ளூர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைத்திட ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News