செய்திகள்

அரசியல் களத்தில் ரஜினிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு - கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

Published On 2018-03-17 06:37 GMT   |   Update On 2018-03-17 06:37 GMT
ரஜினியுடனான தனது நட்புக்கு அரசியல் “ஆப்பு” வைத்து விட்டதாகவும், அரசியல் நடவடிக்கைகள் தங்களுக்குள் கருத்து வேறுபாட்டை உருவாக்கி இருப்பதாகவும் கமல்ஹாசன் மனம் திறந்து கூறியுள்ளார். #Kamalhaasan #Rajinikanth
ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் அரசியலுக்கு வந்துள்ளனர்.



கமல்ஹாசன் “மக்கள் நீதி மய்யம்” எனும் கட்சியை கடந்த மாதம் தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் செல்ல சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். அடுத்த மாதம் திருச்சியில் அவர் மாநாடு ஒன்றையும் நடத்த உள்ளார்.

நடிகர் ரஜினி தற்போது தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து, மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். அடுத்த மாதம் (ஏப்ரல்) தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று அவர் தனது புதிய கட்சியின் பெயரை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. தனது அரசியல் “ஆன்மிக அரசியல்” ஆக இருக்கும் என்று ரஜினி கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அரசியலில் ரஜினியும் கமலும் இணைந்து செயல்படுவார்களா? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார். என்றாலும் அரசியலிலும் தங்கள் நாகரீகமான நட்பு தொடரும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ரஜினியுடனான தனது நட்புக்கு அரசியல் “ஆப்பு” வைத்து விட்டதாகவும், அரசியல் நடவடிக்கைகள் தங்களுக்குள் கருத்து வேறுபாட்டை உருவாக்கி இருப்பதாகவும் கமல்ஹாசன் மனம் திறந்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

அரசியலில் ரஜினிகாந்த் எத்தகைய கொள்கையுடன் இருக்கிறார் என்பது எனக்கு இதுவரை தெரியவில்லை. என்னைப் பொருத்தவரை நான் எந்த பக்கமும் சேரப் போவதில்லை.

எனக்கு எந்த மதமும் கிடையாது. எல்லா மதங்கள் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. எனவே ரஜினியின் ஆன்மிக அரசியலில் எனக்கு நம்பிக்கை இல்லை.

சினிமாவிலும் எனக்கும் ரஜினிக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு. அவர் நடித்த படங்களில் எனக்கு உடன்பாடு கிடையாது. அத்தகைய பட வாய்ப்புகளை நான் ஏற்பது இல்லை.

அதுபோல நான் நடித்தது போன்ற படங்களை அவர் ஏற்பது இல்லை. அதே மாதிரியான நிலைப்பாடு தான் அரசியலிலும் எங்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ளது.

ரஜினியுடனான என்னுடைய நட்புக்கு அரசியல் “ஆப்பு” வைத்து விட்டது. இன்னும் சொல்லப்போனால் அரசியல் எங்களுக்குள் கருத்து வேறுபாட்டை நிச்சயம் ஏற்படுத்தும். இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

அதற்காக அவரது இமயமலை பயணத்தை நான் கண்டிக்கிறேன் என்று அர்த்தம் அல்ல. அரசியலால் எங்களுக்குள் ஏற்படும் பிளவை நினைக்கும்போது சற்று வேதனையாகத்தான் இருக்கிறது.

அரசியலில் நானும் ரஜினியும் ஒன்று சேர வாய்ப்பு உள்ளதா? என்று பலரும் கேட்கிறார்கள். சில கொள்கைகளை அவர் விட்டுக் கொடுக்கலாம். சில கொள்கைகளில் அவர் உறுதியாக இருக்கலாம்.

அது எங்கள் இருவருக்கும் ஏற்புடையதாக இல்லாமல் போகலாம். அத்தகைய சூழ்நிலையில் எங்களிடையே பிளவு ஏற்படும். அது எங்களுக்கே தெரியாது.

தேர்தல் இன்னும் வரவில்லை. வந்த பிறகு அது பற்றி பார்த்துக் கொள்ளலாம்.

திரை உலகில் நானும் ரஜினியும் போட்டியாளர்களாகத் திகழ்ந்தோம். என்றாலும் எங்களுக்குள் நல்ல நட்பு நிலவியது. ஆனால் அரசியலில் அதை எதிர்ப்பார்க்க முடியாது.

அரசியலில் விமர்சனம் செய்யும்போது, அது எங்களை முழுமையாக பிளவுபடுத்தி விடும். அது தவிர்க்க முடியாதது.

ரஜினியின் அரசியல் பற்றி என்னால் இப்போது எந்த கருத்தும் சொல்ல இயலாது. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. அரசியலில் நாகரீகமான போக்கை கடைபிடிக்க விரும்புகிறோம்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார். #Kamalhaasan #Rajinikanth #tamilnews

Tags:    

Similar News