செய்திகள்

வேகமாக குறைந்து வரும் பரப்பலாறு அணை நீர் மட்டம் - விவசாயிகள் கவலை

Published On 2018-03-14 11:53 GMT   |   Update On 2018-03-14 11:53 GMT
வேகமாக குறைந்து வரும் பரப்பலாறு அணை நீர் மட்டத்தால் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.
சத்திரப்பட்டி:

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வடகாடு மலைப் பகுதியின் மேற்கு தொடர்ச்சி மலையில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். அணையின் மொத்த கொள்ளளவு 197.95 மில்லியன் கன அடி ஆகும். தற்போது அணையில் 67 அடி தண்ணீர் உள்ளது. 56 மில்லியன் கனஅடி தண்ணீர் கொள்ளளவாக உள்ளது. வரத்து இல்லை. சத்திரப்பட்டி, விருப்பாட்சி, ஒட்டன்சத்திரம் ஆகியவற்றின் குடிநீருக்காக 3 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது,

இதன் மூலம் தாசரிபட்டி முத்துபூபாலசமுத்திரம், விருப்பாட்சி பெருமாள் குளம், தங்கச்சியம்மாபட்டி சடையகுளம், ஓடைப்பட்டி செங்குளம், வெரியப்பூர் ராமசமுத்திரம், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் ஆகிய ஆறு குளங்கள் பாசன வசதி பெறுகிறது. பரப்பலாறு அணையின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 2034 ஏக்கர் நிலங்களும், கரூர் மாவட்டத்தில் 289 ஏக்கர் நிலங்களும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. சத்திரப்பட்டி, விருப்பாட்சி, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பரப்பலாறு அணை உள்ளது.

இந்த ஆண்டு போதிய அளவு வடகிழக்கு பருவமழை பெய்யாத காரணத்தினால் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள 6 குளங்களும் நிரம்பாமல் உள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் கவலையடைந்துள்ளனர். இப்பகுதியில் ஒருசில ஊர்களைத் தவிர பிற ஊர்களில் தண்ணீர் தட்டுப்பாடு தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

பரப்பலாறு அணையை தூர்வாராத காரணத்தினால் வண்டல் மண் மற்றும் கழிவுகள் படிந்துள்ளது. இதனை அகற்ற பொதுப்பணித்துறையினர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதுள்ள தண்ணீர் வரும் அக்டோபர் வரை குடிநீர் தேவைக்கு போதுமானதாக இருப்பதால் கோடை மழை பெய்தால் மட்டுமே குடிநீர் மற்றும் பாசனத்துக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
Tags:    

Similar News